ரஜினியும், கமலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் சிறப்பு! Share

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர் லால் நடிப்பில்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர் லால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது அதே கூட்டணியில் மீண்டும் சண்டக்கோழி-2 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் காட்சிகள், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பின் இடையே நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து?
பதில்:- மிக்க மகிழ்ச்சியான விஷயம். தமிழ்த்திரை உலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம். அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை தமிழ்த்திரை உலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.
கேள்வி:- கமல்ஹாசன், ரஜினி அரசியல் பற்றி?
விஷால்:- ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் திரையுலகினரும், புதியவர்களும் அதிக அளவில் போட்டியிடுவார்கள்.
கேள்வி:- திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து உங்கள் நடவடிக்கைகள் என்ன?
விஷால்:- பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார்கள். பொதுமக்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தால் தான் அந்த பணத்தை தயாரிப்பாளர் எடுக்க முடியும். ஆனால் திருட்டு வீடியோ வெளியிடுவோர், அது தவறு என்று தெரிந்தும் அந்த தொழிலை செய்து வருகிறார்கள். விரைவில் இதற்கு நல்ல முடிவு ஏற்படும்.
கேள்வி:- உங்கள் திரைப்படங்களில் நாடக நடிகர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறீர்களே ஏன்?
பதில்:- அழிந்து வரும் கலையாக நாடகம் உள்ளது. திரைப்பட நடிகர்களின் ஆணிவேராக இருப்பவர்கள் நாடக நடிகர்களே. அதனால் தான் என்னுடைய திரைப்படங்களில் அப்பகுதியில் உள்ள நாடக நடிகர்களை பயன்படுத்தி வருகிறேன்.
கேள்வி- உங்களின் திருமணம் எப்போது நடக்கும்?
பதில்:- நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது சொன்னது தான். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின்பு தான் எனது திருமணம். அதுபோல 2019-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறந்து முடித்தவுடன், எனது திருமணம் தமிழக மக்கள் ஆசியுடன் நடக்கும்.
கேள்வி:- சண்டக்கோழி-2 படத்தின் சிறப்பு என்ன?
பதில்:- லிங்குசாமியை பொறுத்தவரை குடும்பத்துடன் வந்து தன்னுடைய படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். சண்டக்கோழி படம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி கிராமங்களில் கூட எனது பெயர் தெரியும் அளவுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இப்போது 12 ஆண்டுகள் கழித்து, சண்டக்கோழி-2 படம் வெளிவருகிறது. சண்டக்கோழியை முதல் பாகத்தைவிட இந்த படம் எனக்கு அதிக அளவில் பெயர் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com