பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம் Share

பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.

பிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்), சாத் நசிம் (77 ரன்), வஹாப் ரியாஸ் (51 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாடி அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினர். 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியில் தமிம் இக்பால் தூண்போல் நிலைகொண்டு விளையாடி பாகிஸ்தானை கதறடித்தார். அவருக்கு முஷ்பிகுர் ரம் (65 ரன்) தோள்கொடுக்க, வெற்றிப்பயணம் சுலபமானது. முதலாவது ஆட்டத்தில் சதம் அடித்த தமிம் இக்பால் இந்த ஆட்டத்திலும் சதத்தை பதிவு செய்தார்.

முடிவில் வங்காளதேச அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 116 ரன்களுடன் (116 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.  ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வங்காளதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வங்காளதேச அணி வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.  இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..