20 ஓவரில் டிரா செய்த பஞ்சாப்: சூப்பர் ஓவர் மூலமாக அபார வெற்றி Share

அகமதாபாத்தில் நடந்த பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டியில் சூப்பர் ஓவர் வீசப்பட்டதால் போட்டியில் அனல் பறந்தது.போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சேவாக் பீல்டிங்கை தேர்வு செய்தார். ரகானேவின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின், தொடக்க வீரர்களாக முரளி விஜயும் சேவாகும் களமிறங்கினர். 2-வது ஓவரிலேயே சேவாக் வெளியேற மார்ஷ் முரளியுடன் கை கோர்த்தார்.

21 ரன் எடுத்திருந்த முரளி விஜய் 7 வது ஓவரில் அவுட்டாக, நிலைத்து நின்று ஆடிய மார்ஷ் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே திரும்ப, 65 ரன் எடுத்த மார்ஷூம் மேக்ஸ்வெல்லை அடுத்து வெளியேறினார். பின்னர் வந்த மில்லர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 54 ரன் குவித்தார். சாஹா 8 பந்துகளில் 19 ரன் குவித்து அவுட்டானார். இருவரும் அடுத்தடுத்து வெளியேற 18 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 166 ஆக இருந்தது.

அப்போது யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற நிலை இருந்தது. படேலும் ஜான்சனும் களத்தில் நின்றனர். ஒரு கட்டத்தில் 6 பந்துகளில் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் நகத்தைக் கடித்தனர். நொடிக்கு நொடி பரபரப்பு அதிகமானது. ஆட்டத்தின் கடைசி பந்து 5 ரன் எடுக்க வேண்டும். படேல் தூக்கி அடித்த பந்து 6 ஆக மாற வேண்டும் என்ற ரசிகர்களின் பிரார்த்தனையை புவி ஈர்ப்பு விசை ஏமாற்ற அது 4 ஆக மாறி ஆட்டம் டிராவானது.

சிறப்பு விதிகளின் படி, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. தவற விட்ட வெற்றியை திரும்பப் பெறும் வெறியுடன் களமிறங்கியது பஞ்சாப். முதல் பந்திலேயே அதிர்ச்சிகரமாக மில்லர் அவுட்டானார். அடுத்த பந்தில் மேக்ஸ் வெல் ஒரு ரன் எடுத்தார். 3 வது பந்து நோ பாலாக அந்த பாலில் 4 அடிக்கப்பட்டது. திரும்ப வீசப்பட்ட 3 வது பந்திலும் 4 ரன்கள். 4 வது பந்திலும் 4 ரன். 5 வது பந்தில் ரன் இல்லை. 6 வது பந்தில் 1 ரன், என மொத்தமாக 15 ரன் எடுத்தது பஞ்சாப் அணி.

6 பந்துகளில் 16 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது ராஜஸ்தான். முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வாட்சன் அவுட்டானார். 2 வது பந்து நோ பால் அதே நேரம் 4. திரும்ப வீசப்பட்ட 2 வது பந்தில் 1 ரன். மைதானமே உச்சகட்ட பரபரப்பில் இருந்தது. 3 வது பந்தில் பால்க்னர் ரன் அவுட் ஆக பஞ்சாப் ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..