டுமினி, அய்யர் அதிரடி ஆட்டம்: இம்ரான் தஹிரின் அபார பந்து வீச்சால் மும்பையை வீழ்த்தியது டெல்லி Share

ஐ.பி.எல். திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.



அதன்படி முதலில் பெட்டிங் செய்த டெல்லி அணி டுமினி (78 அவுட் இல்லை), அய்யர் (83) அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல் களம் இறங்கினார்கள். சிம்மன்ஸ் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து உன்முக் சந்த் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த பட்டேல் அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு உன்முக் சந்த் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். உன்முக் சந்த் 9-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். அடுத்து பொல்லார்டு களம் இறங்கினார். இவர் 10 ரன்கள் எடுத்த திருப்தியில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு சர்மாவுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்றது. ஆனால் அவர்களால் அதிரடியை தொடர முடியவில்லை. சர்மா 24 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், ராயுடு 22 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினார்கள். அத்துடன் மும்பை அணியின் தோல்வி உறுதியானது.

20 ஓவர் முடிவில் மும்பை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தஹிர் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெல்லி அணி அதன் சொந்த மைதானத்தில் 9 தோல்விக்குப் பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com