சென்னை பெண் வெட்டிக்கொலை: சாராய வியாபாரியின் 2–வது மனைவி உள்பட 6 பேர் கைது Share

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் வெள்ளாளன் தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணன். இவர் பிரபல சாராய கடத்தல் வியாபாரி. இவரது மனைவி வினோதா (வயது 38). ராதாகிருஷ்ணன் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 11.1.2013 அன்று ராதாகிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் எழிலரசியுடன் காரைக்கால் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் வினோதா உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அதனைத்தொடர்ந்து வினோதா மற்றும் எழிலரசி ஆகியோருக்கு இடையே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வினோதா சென்னையில் அவரது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் சொத்து பிரச்சினை சம்பந்தமாக காரைக்காலுக்கு வந்தார். நேற்று முன்தினம் வினோதா ஒரு காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். சீர்காழி பைபாஸ் சாலையில் சென்றபோது, காரை வழிமறித்த மர்மகும்பல் வினோதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக எழிலரசி (34), ராதாகிருஷ்ணனின் நண்பர் காஞ்சிபுரம் செய்யூர் தாலுகா நயினார்குப்பத்தை சேர்ந்த ரஞ்சித் (27), சென்னை பெருங்குடி டி.வி. நகரை சேர்ந்த காளிதாஸ் (29), சென்னை மயிலாப்பூர் ரூதர்புரத்தை சேர்ந்த அருணகிரி (36), திருவான்மியூரை சேர்ந்த கந்தா என்ற கந்தக்குமார் (27), சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற சரவணன் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் எழிலரசியிடம், கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், வினோதா, எழிலரசி ஆகியோருக்கு இடையே ராதாகிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்விரோதமும், சொத்து பிரச்சனைகளும் இருந்து வந்ததும் ஒருவருக்கு ஒருவர் உயிர் அச்சுறுத்தல் இருந்து வந்ததால், எழிலரசி தனது உயிரை காப்பாற்றி கொள்ள ராதாகிருஷ்ணனின் நண்பர்கள் உதவியுடன் கூலிப்படையை ஏவி வினோதாவை கொலை செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் சீர்காழி கோர்ட்டில் நீதிபதி மணிமேகலை முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..