புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற ஓட்டல் அறையில் சந்தித்த விராட் கோலி Share

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரைச் சேர்ந்த சித்தாந்த் துபே என்ற சிறுவனுக்கு ‘ஹாட்கின் லிம்போமா’ எனப்படும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பதை இரண்டாண்டுகளுக்கு முன்னர் அறிந்த அவனது பெற்றோர்

மனவேதனையால் துடிதுடித்துப் போனார்கள்.

அதைவிட கொடூரமான மன வேதனையில் மூழ்கிய சித்தாந்த் துபே, உலகையே வெறுக்க தொடங்கினான். அவனது வெறுப்புக்கு காரணம் நாம் இன்னும் கொஞ்சம் நாட்களில் இறந்து விடுவோமே.., என்ற கவலை அல்ல.., நமது அபிமான கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பார்க்காமல் இந்த பூமியை விட்டு போய் விடுவோமோ..,? என்ற ஆதங்கத்தில் அவனது உள்ளம் வெதும்பி அழுதது.

இதற்கிடையில், குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள பிரபல புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சித்தாந்த் துபே நோயில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விட்டான். ஆனால், அங்கு சிகிச்சை பெற்றுவந்த வேளையில் கோலியை சந்தித்தாக வேண்டும் என்பது ஆவனது இதயத்துடிப்போடு இரண்டற கலந்துப்போன முனகல் சத்தமாக மாறிவிட்டிருந்தது.

அப்போது, அன்புப் பேரனின் ஆற்றாமையை கண்டு கண்ணீர் வடித்த அவனது 73 வயது பாட்டி வித்யா, ‘நீ கவலைப்படாதே செல்லம், உன்னை அழைச்சிட்டுப் போய் விராட் கோலியுடன் சந்திக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு’ என உறுதியளித்தார். டாக்டர்கள் தந்த மருந்தால் பாதி நோய் குணமாக, பாட்டி தந்த தெம்பால் மீதி நோயும் காணாமல் போனது.

இந்நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியினருக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி கடந்த 24-ம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவரான விராட் கோலி அகமதாபாத் நகருக்கு வருகிறார் என்பதை சிகிச்சைக்காக அங்கு வந்திருந்த சித்தாந்த் துபே அறிந்து கொண்டான்.

’என்னடி, வித்யா பாட்டி.., சொன்னது என்னாச்சு..?’ என்று அவன் நெருக்கடி கொடுக்க, முயன்றுதான் பார்ப்போமே என்று அகமதாபாத் நகரில் கோலி தங்கியிருந்த அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற வித்யா பாட்டி, ஓட்டல் மேனேஜரை சந்தித்து, நடந்த சம்பவங்களையெல்லாம் சுருக்கமாக கூறினார். விராட் கோலியை ஓரிரு நிமிடங்கள் என் பேரன் சந்திக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என மன்றாடினார்.

இரக்கப்பட்ட மேனஜர், கோலியிடம் இந்த வேண்டுகோளை தெரிவிக்க அவரும் சித்தாந்த் துபேவை சந்திக்க சம்மதம் தெரிவித்தார். உடனடியாக தனது காரை அனுப்பி சித்தானந்த் துபே மற்றும் அவனது குடும்பத்தாரை ஓட்டலுக்கு அழைத்துவர செய்தார். தனது அறையில் அவர்களை உபசரித்து மகிழ்வித்த கோலி, சித்தாந்த் துபேவுடன் கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட விஷயங்களை பேசி அவனை மகிழ்வித்தார்.

பின்னர், அவரிடம் இருந்து கண்ணீருடன் பிரியாவிடை பெற்ற சித்தாந்த் துபே, என்னுடைய கனவு நிறைவேறி விட்டது, அவர் என்னை கட்டியணைத்து வாழ்த்தியதுடன் எங்களுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான வி.வி.ஐ.பி. டிக்கெட்களையும் தந்தனுப்பினார்.

கோலி சாரைப் போல சிறந்த கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் வளர்ந்த நான், அவரை சந்தித்த இந்த நிமிடத்துக்குப் பிறகு அவரைப் போன்ற மனிதாபிமானம் மிகுந்த கிரிக்கெட் வீரராகவும் வர வேண்டும் என முடிவு செய்துள்ளேன் என்று நிருபர்களிடம் சித்தாந்த் துபே தெரிவித்தான்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..