பேட்டிங்கில் சொதப்பல்: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை அணி 134 ரன் சேர்ப்பு Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.அந்த அணியில் மோர்னே மோர்கல், சுனில் நரைன், போதா ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக கம்மின்ஸ், பிராட் ஹாக், டென் டோயிஸ்சே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியே விளையாடுகிறது.

சென்னை அணியின் சுமித், மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சுமித் பவுண்டரி அடித்தார். 2-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் மெக்கல்லம். கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் மெக்கல்லம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் சுமித் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 5-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மெக்கல்லம் 4-வது பந்தில் அவுட் ஆனார். அவர் 14 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய ரெய்னா கடைசி பந்தில் சிக்சர் அடித்தார்.

9-வது ஒவரை பிராட் ஹாக் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் சுமித் ரன் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் ரெய்னா 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது சென்னை அணி 9.3 ஓவரில் 67 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து வந்த தோனி 3 ரன்களிலும், பிராவோ 5 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் உயர்வில் மந்த நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில் சென்னை அணி 15.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுபிளிசிஸ், ஜடேஜா அதிரடியாக விளையாட நினைத்தபோதும் பந்து பேட்டில் சரியாக படவில்லை. 12-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த சென்னை அணி அதன்பின் 17-வது ஓவரின் 2-வது பந்தில்தான் பவுண்டரி அடித்தது.

18-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை பிராட் ஹாக் வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா அவுட் ஆனார். அவர் 20 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் அஸ்வின் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..