இறைவன் அருளால் நில நடுக்கத்தில் இருந்து உயிர் தப்பினோம்: கோவை பயணிகள் அதிர்ச்சி பேட்டி Share

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் துரைசாமி ஆகியோர் நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி பீளமேட்டை சேர்ந்த தேவராஜ் (வயது 67) ஆவாரம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 பெண்கள் உள்பட 17 பேருடன் கடந்த 22–ந் தேதி புறப்பட்டனர். அனைவரும் 60 வயது கடந்த மூத்த குடிமக்களாவார்கள்.

25–ந்தேதி (சனிக்கிழமை) 108 திவ்ய தலங்களில் ஒன்றான முக்திநாத் சென்று வழிபட்டனர். அன்று ஓட்டலில் தங்கியபோது தான் நில நடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து தேவராஜ், சுந்தர்ராஜ் ஆகியோர் கூறியதாவது:–

முக்திநாத் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு ஓட்டலில் தங்கிய போது கட்டிடம் குலுங்கியதை எங்களால் உணரமுடிந்தது. அதிர்ச்சியடைந்த நாங்கள் ஓட்டலை விட்டு வெளியேறினோம். வெளியே வந்ததும் எங்களை போலவே பொதுமக்கள் வீதியில் குவிந்தனர்.

ஊருக்கு புறப்பட ஜாம்ஜோன் கோவில் வழியே புறப்பட்டோம். ஆனால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு கிடைத்தது. மீண்டும் ஓட்டலில் தங்கினோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு விமானத்தில் செல்ல 30 நிமிட நேரமாகும். ஆனால் காட்மாண்டுக்கு வர பஸ்தான் எங்களுக்கு கிடைத்தது.

200 கி.மீட்டர் தூரம் பஸ்சில் வந்தபோது தான் நிலநடுக்கத்தின் கொடுமையை பார்க்க முடிந்தது. கட்டிடங்கள் இடிந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் கிடந்தன. இடிந்த கான்கிரீட்டுக்கு அடியில் சிலர் உடல் நசுங்கி இறந்து கிடப்பதையும், உடல்களை மீட்பு குழுவின் மீட்டதையும் பார்த்து பீதியில் உறைந்து போனோம். வீதிகளில் பொதுமக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருந்தனர். நாங்கள் என்ன ஆனோம் என்று தெரியாமல் வீட்டில் இருந்து போன் அடிக்கடி வந்தது. நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். என்று கூறினோம். ஒரு வழியாக காட்மாண்ட் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால் விமான சேவை எதுவும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தோம். இந்திய அரசு விமான படை மூலம் இந்தியர்களை மீட்டு வந்தது. நாங்களும் விமான படை விமானத்தில் டெல்லி வந்தோம். அங்கிருந்து நாங்கள் கோவை வந்து சேர்ந்தோம்.

இறைவன் அருளால் நாங்கள் உயிர் பிழைத்தோம். மற்றபடி அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்றனர்.

ஈரோட்டை சேர்ந்த சசிக்குமாரின் மகன் செங்கதிர் (7). இவர் கோவையில் உள்ள ஒரு அறக்கட்டளையின் சார்பாக இமயமலை பகுதியில் உள்ள மணாலி எந்த இடத்துக்கு மலையேற்ற பயிற்சிக்கு புறப்பட்டார்.

செங்கதிருடன் 16 மாணவர்களும் சென்றனர். 16 ஆயிரம் அடி தூரம் மலைபயிற்சி முடிந்து சனிக்கிழமை இரவு டெல்லி வந்தனர். இவர்கள் வந்த பின்னரே நேபாளத்தில நில நடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் உயிர் தப்பினர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..