வால்பாறை-சாலக்குடி ரோட்டில் காட்டு யானை குட்டி ஈன்றது - 6½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Share

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் 2 புறமும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் வாச்சுமரம் என்ற

இடத்திற்கு அருகே கொல்லந்திருமேடு வனத்துறை அலுவலகம் அருகில் ஒரு வளைவு பகுதியில் நேற்று முன்தினம் கர்ப்பிணி யானை ஒன்று வந்தது. அந்த யானை திடீரென்று நடுரோட்டில் குட்டியை ஈன்றது.

அதைத்தொடர்ந்து, தாய் யானையும், குட்டியும் நடுரோட்டில் நின்று இருந்தன. அதைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட யானைகள் நின்றுக் கொண்டிருந்தன.

இதையடுத்து கேரள வனத்துறையினர், யானைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக யாரையும் அருகில் விட வில்லை. இதனால் அந்த ரோட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. மதியம் சுமார் 12 மணிக்கு குட்டி ஈன்ற யானை மாலை 6.30 மணி வரை அங்கே இருந்தது. அதன் பிறகு தாய் யானை, தனது குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. அதைத்தொடர்ந்து மற்ற யானைகளும் ஒவ்வொன்றாக காட்டுக்குள் சென்றன.

இந்த சம்பவத்தால் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் சுமார் 6½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். வால்பாறை-சாலக்குடி ரோட்டில் யானை குட்டி ஈன்றது இதுவே முதல்முறை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..