Loading...

திருமணங்கீஸ்வரர் திருத்தலம் - திருவள்ளூர் Share

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ளது மேலூர் திருமணங்கீஸ்வரர் திருத்தலம். இத்தல நாயகியின் பெயர் திருவுடையம்மன் என்பதாகும். 18–ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், காஞ்சீபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

அந்த காலத்தில் அவ்வாளுகையின் மேல் பகுதியாக இருந்த இடமே இன்று ‘மேலூர்’ என்று அழைக்கப்படுவதாக பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

பால் சுரந்த பசு :

முன் காலத்தில் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. பின்னர் சில காலம் கழித்து அங்கு சிறிய கிராமம் ஒன்று உருவானது. கிராமத்தில் வாழ்ந்த ஒருவர் நிறைய பசுக்களை வைத்திருந்தார். அவரது பசுக்களில் ஒன்று தினமும், காட்டுக்குள் இருக்கும் சுகந்த வனம் என்ற பகுதிக்குள் சென்று வந்தது. ஒரு பசு மட்டும் தனியாக சென்று, சிறிது நேரம் கழித்து திரும்பி வருவதைக் கண்ட பசு வளர்ப்பவர், ஒரு நாள் அந்தப் பசுவை பின் தொடர்ந்து சென்றார்.

சுகமான வாசம் வீசும் அந்தக் காட்டுப் பகுதிக் குள் நுழைந்ததும் அவர் தன்னை மறந்தார். அந்த வாசம் அவரது மனதை மயக்கியது. பசுவை பின் தொடர்ந்து ஓரிடத்தில் மறைவாக நின்று, பசுவின் நடவடிக்கையை கவனித்தார். பசுவானது சரக்கொன்றை மரம் நிறைந்த ஒரு மேட்டு பகுதியில் தானாகவே பாலை சொரிந்தது. அந்த பாலை புற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட பாம்பு ஒன்று அருந்தியது. இந்த அபூர்வ காட்சியைக் கண்ட அவர் மெய் சிலித்தார். பின்னர் பசு அங்கிருந்து புறப்பட்டதும், பாம்பு தன் புற்றுக்குள் சென்று மறைந்தது.

சுயம்பு லிங்கம் :

பசுவுக்கு சொந்தக்காரர், முட்புதரால் மறைக்கப்பட்டிருந்த புற்றை பார்ப்பதற்காக முட்புதரை விலக்கினார். அந்தப் புற்று சிவலிங்க வடிவமாக காட்சியளித்தது. இது பற்றி அவர் ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். ஊர் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். சிவபெருமானே, புற்று வடிவில் அங்கு வாசம் செய்வதாக ஊர் மக்கள் கருதினர். அப்போது ஒருவர் மீது தெய்வ அருள் வந்து ஆடத் தொடங்கினார். அவர், இந்த இடத்தில் சிவனுக்கு ஆலயம் எழுப்பி வழிபாடு செய்யுங்கள்.

ஊரும், மக்களும் சுபிட்சம் அடைவீர்கள் என்று அருள்வாக்கு கூறினார். இதையடுத்து ஊர் மக்கள் சார்பில் சுயம்பு லிங்கத்திற்கு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. புற்று வடிவிலான சிவபெருமானுக்கு லிங்க வடிவில் கவசம் செய்து சாத்தி வழிபட்டனர். சுகந்த வனத்தில் வீற்றிருந்த காரணத்தால், இறைவனுக்கு சுகந்தீஸ்வரர் என்று பெயரிட்டு அழைத்தனர். மேலும் கொன்றை மரத்தில் இருந்து மலர்கள், சிவலிங்கத்தின் மீது விழுந்து நறுமணம் வீசியதால், திருமணங்கீஸ்வரர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

ஒரு முறை சோழ நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் குலோத்துங்கன், இவ்வாலயம் வழியாக வந்து கொண்டிருந்தான். அப்போது இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து, சில காலம் இங்கு தங்கி தினமும் சிவபெருமானை பூஜித்து வந்தான். அப்போது சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டும் இருப்பதைக் கண்ட அரசன், ஒரு சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக அம்மனை சிலையாக வடித்து வந்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான். இந்த ஆலயத்தில் இச்சா சக்தியாகிய திருவுடையம்மனை நிறுவுவதற்காக, தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டுவர, சிற்பி அலைந்து திரிந்தார்.

பின்னர் மலை உச்சியில் ஒரு கல்லை கண்டார். அதை கீழே எடுத்து வந்தபோது, பிடி நழுவி அந்தக் கல் உருண்டு விழுந்ததில் அது மூன்று பாகமாக உடைந்தது. தன் தவறால்தான் கல் உடைந்ததாக நினைத்த சிற்பி, தனது கையை சிதைத்துக் கொள்ள முயன்றார். அப்போது அம்மன் அவர் முன்பு தோன்றி அவரை தடுத்து நிறுத்தினாள். நான் இந்தத் தலத்தில் மட்டும் இல்லாமல், புற்றீஸ்வரர் வீற்றிருக்கும் திருவொற்றியூர், மாசிலமணீஸ்வரர் அருள்புரியும் திருமுல்லைவாயில் ஆகிய தலங்களிலும் ஞான சக்தி, கிரியா சக்தி வடிவமாக உருக்கொள்ளவே மூன்று பாகங்களாக ஆனேன்.

மூவகை உருவத்தையும் வடித்து அந்தந்த கோவிலில் நிறுவுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அவ்வாறு அம்மன் காட்சி தந்த தினம் பவுர்ணமியாகும். அது முதல் சிற்பிக்கு ஞானமும், செல்வமும் பெருகின. சிற்பிக்கு அம்மன் காட்சி தந்த பவுர்ணமி தினத்தில், திருவுடை, வடிவுடை, கொடியிடை நாயகிகளை வணங்குவோர் அனைத்து வளமும் பெறுவர் என்று கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு :

அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். மேல் இரு கரங்களிலும் பாச அங்குசமும், கீழ் வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் வரத ஹஸ்தமும் கொண்டு அருள்புரிகிறாள். அம்பாளின் கருவறையை ஒட்டினாற்போல் வெளியே மேற்கில் ஒரு புற்று உள்ளது. அந்தப் புற்றில் உள்ள நாகத்துக்கு இன்றளவும் பால் வைக்கப்படுகிறது. அந்தப் புற்று அமைந்திருக்கும் இடத்தை ஒட்டி அர்த்த மண்டபம் உள்ளது. அன்னையின் ஆலயத்திற்கு முன்பாக சிறு மண்டபத்தில் சிம்ம வாகனமும், பலி பீடமும், அதையடுத்து கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறந்திருக்கும். சென்னையில் இருந்து மீஞ்சூர் செல்லும் பேருந்தில் சென்றால் மேலூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலமாகவும் மேலூர் திருத்தலத்தை சென்றடையலாம்.

பயறாக மாறிய மிளகு :

ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு முன்பாக 16 கால் கருங்கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருவுடையம்மன் சன்னிதிக்கு முன்பாகவும் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. இதற்கு மிளகு மாற்றியான் மண்டபம் என்று பெயர். இந்தக் கல் மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தவர் ஒரு மிளகு வியாபாரி என்பதால் இந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் மிளகுக்கு சுங்கம் வசூலிக்கும் பழக்கம் இருந்தது.

இந்தப் பகுதியில் மிளகு வியாபாரம் செய்ய வந்த ஒரு வியாபாரி, சுங்க அதிகாரியை ஏமாற்றுவதற்காக  மூட்டையில் பயறு இருக்கிறது என்று கூறினார். எனவே அதிகாரிகள் மூட்டையை சோதிக்காமல் விட்டு விட்டனர். அவ்வாறு அதிகாரிகள் சோதித்தது அம்மனின் ஆலயம் முன்பாக நின்றுகொண்டு. இந்த நிலையில் சந்தைக்குச் சென்ற மிளகு வியாபாரி, மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது மிளகுக்குப் பதிலாக பயறுதான் இருந்தது. பொய் கூறிய வியாபாரி, அம்பாளின் திருத்தலம் முன்பாக நின்று பொய் கூறியதை எண்ணி வருத்தம் கொண்டார்.

பின்னர் மனப்பூர்வமாக அன்னையிடம் மன்னிப்பு கோரி கண்ணீர் வடித்தார். இதையடுத்து பயறு மீண்டும் மிளகாக மாறியது. இத்தல அம்பாளின் மகிமையைப் புரிந்து கொண்ட மிளகு வியாபாரி, சுங்கப் பணத்தைக் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்து, தன் தவறை உணர்ந்து திருந்தியதற்கு அடையாளமாக இந்த மண்டபத்தைக் கட்டிக் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com