Loading...

தீண்டா திருமேனி நிறம்மாறும் சிவன் கோவில் Share

திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தீண்டா திருமேனி நிறம் மாறும் சிவன் கோவில். திருவள்ளூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கூவம் என்கிற கிராமத்தில் இந்த கோவில் அமைந்து உள்ளது.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளித்து தீராத நோய்களை தீர்த்து வைக்கும் தலமாகவும் விளங்குகிறது. முட்பிறவி பாவங்களை தீர்த்து வைத்து சிவபெருமாள் அருள்பாலித்து வருகின்றார்.

திருக்கோவிலின் வரலாறு :

கடந்த 11-ம் நூற்றாண்டில் உத்தம சோழர் மன்னரின் ஆட்சி காலத்தில் தரிசு நிலத்தை விவசாயி கலப்பையால் உழும் போது பூமியில் இருந்து கூம் என்ற சத்தத்துடன் மண்ணில் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டதாகவும் கலப்பையின் வெட்டு காயம் சிவலிங்கத்தின் மீது பட்டதால் அதில் இருந்து ரத்தம் கசிந்து ஓடி அருகில் இருந்த மண் சிவப்பு நிறமாக மாறியதாகவும், காட்டில் மேய்ந்த பசுமாடு தானாக வந்து சிவலிங்கத்தின் மீது மடி கறந்ததால் ரத்த கசிவு நின்றதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. இதைத் தொடர்ந்து உத்தம சோழர் ஆட்சி காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது. கூம் என்ற பெயர் மருவி கூவம் என்று அழைக்கப்பட்டது. அருகில் தோன்றிய நதி கூவம் ஆறாக பெயர் பெற்றது.

சிறப்பு அம்சம் :

இந்த கோவிலில் உள்ள சுவாமிக்கு திரிபுராந்தகேஸ்வரர் என்ற பெயரும் அம்பாளுக்கு திரிபுரசுந்தரி என்ற பெயரும் உள்ளது. சுவாமிக்கு வலது புறம் அம்மாள் சன்னதி உள்ளது. கோவிலின் உள்ளே 11ம் நூற்றாண்டு கால சிற்பங்கள், வினாயகர், தட்சணா மூர்த்தி, பால சுப்பிரமணியன், சோமசுந்தரேசன், பிரம்மா, துர்கை, நவக்கிரகம், பிரகதீஸ்வரர், நடராஜர், சந்திரசேகரர், சுக்கிரவார் அம்மன், சோமவார சுவாமி சிலைகள் உள்ளன. இங்கு தினமும் 4 கால பூஜை நடைபெற்று வருகின்றது.

உச்சி கால பூஜைக்கு கூவம் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிஞ்சிவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து யாதவர்கள் மூலமாக பால் மற்றும் வாசனை இல்லாத மலர்களை எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. பூமியில் இருந்து சிவபெருமான் தானாக தோன்றியதால் இங்கு பூஜை செய்யும் போது அர்ச்சகர்கள் சாமியை தொடாமல் பூஜை செய்ய வேண்டும். இதனால் சிவபெருமானுக்கு ‘தீண்டா திருமேனியர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நிறம் மாறும் சிவன் :

கூவம் கிராமத்தில் வீற்றிருக்கும் சிவன் பல்வேறு காலங்களில் தன்னுடைய நிறத்தை மாற்றி நன்மை-தீமைகளை வெளிக்காட்டியதால் நிறம் மாறும் சிவன் என்ற பெயரும் ஏற்பட்டது. பருவ காலம் மாறும் போது மழை பெய்வதற்கு அறிகுறியாக சிவபெருமானின் வலது புறம் கருப்பு நிறமாகவும், மழை இல்லாமல் வறட்சி ஏற்படும் என்றால் இடது புறம் வெண்மையாகவும், கிராமத்தில் ஏதேனும் தீங்கு, கெடுதல் நடைபெறும் என்றால் சுவாமி முழுமையாக ஆரஞ்சி நிறத்திலும் காட்சி அளிப்பதாகவும் அதை தினமும் சிவபெருமானை பூஜிக்கும் அர்ச்சகர் மட்டுமே அறிய முடியும் என்று கூறப்படுகின்றது.

கடந்த 1879ம் ஆண்டு இந்த கோவிலின் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் 13 நாள் திருவிழாவும், ஆடி மாதம் அம்பாளுக்கு 10 நாள் திருவிழா நடைபெற்று வருகின்றது. கோவில் அருகே அமைந்து உள்ள திருக்குளம் அக்கினி தீர்த்தகுளம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த குளத்தில் குளித்தால் பாவம் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

கூவத்தில் பாவம் செய்தால் காசிக்கு சென்றாலும் மாளாது தீராத பாவங்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது. வியாதியை குணப்படுத்தும் ஆற்றல் இந்த கோவில் குளத்தில் உள்ள நீரில் உள்ளதாக ஐதீகம். இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைக்கப்பட்ட இந்த கோவிலை கொண்டஞ்சேரி, பிள்ளையார்குப்பம், கூவம், இருளஞ்சேரி, குமாரச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சைவ வேளாளர் மரபினர் கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com