ஸ்ரீரங்கம் தசாவதார கோவில் Share

ஸ்ரீரங்கத்தில் 10 அவதாரங்களும் மூலஸ்தானத்தில் வரிசையாக அமைந்துள்ள தசாவதார கோவில் உள்ளது. மூலவராக இங்கு லட்சுமி நாராயணர் உள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்தார்.

அந்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாக மாறி உள்ளது. இத்தலத்தில் திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதி யுள்ளது. அகோபில மட ஜீயர் ஸ்வாமி 44வது பட்டம் ஸ்ரீ ஆதிவண்சட கோப யதீந்திர மஹா தேசிகன் மற்றும் அவருடைய குரு 41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீவன் சடகோபல லட்சுமி நரசிம்ம ஸ்ரீ சடகோப யதீந்திர மஹா தேசிகன் ஆகியோரின் திருவரசு (ஜீவசமாதி) தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது.

தசாவதாரங்களை ஒரே இடத்தில் வழிபட வழிவகுக்கும் இந்த ஆலயம் கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக போற்றப்படுகிறது. இந்த காரணத்தால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம். பிரார்த்தனை நிறைவேறி யவுடன் 10 அவதார மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்யலாம்.

கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவவராக லட்சுமி நாராயணர் மட்டுமே இருப்பது சிறப்பாகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com