Loading...

சுகந்த குந்தாளம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோயில் Share

தஞ்சையிலிருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் பாபநாசம் நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கோவில் தேவராயன் பேட்டை என்னும் சிற்றூர். ஆயிரம் ஆண்டு கால வரலாற்றுச் சின்னங்களை தன்னுள் சுமந்து கொண்டு அமைதியில் ஆழ்ந்துள்ளது இந்தக் கிராமம்.

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில், சுகந்த குந்தாளம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயம் புராணப் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட அற்புத ஆலயம் ஆகும். மேலும் இது, தேவார வைப் புத் தலம் என்ற பெருமையும் உடையது.

வேதத்தைக் காக்க பரந்தாமன் எடுத்த முதல் அவதாரமே மச்சாவதாரம். அந்த மச்சாவதாரத்துடன் சம்பந்தப்பட்ட தலமாக கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒரு அசுரனால் பிரம்ம தேவனிடமிருந்து களவாடப்பட்ட நான்மறைகளையும் மீனாய் வந்த திருமால் மீட்டுத் தந்தார். அப்படி மச்சவதாரம் எடுத்த பரம்பொருளே கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.

இறைவன் மீன் வடிவம் தாங்கி உலகையும் காத்து, வேதங்களையும் மீட்டு, சிவ பூஜையும் செய்த பெருமையுடையது இந்தத் தலம். கல்விக்கு அடிப்படையான வேதங்களை பகவான் மீட்ட தலம் இது என்பதால் கல்வி கற்று வரும் மாணவ, மாணவிகள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. இதனால் ஞானமும், கல்வியும் ஏற்பட்டு மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

குல தெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள் இங்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தளாம்பிகையையும் வணங்கி மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்தால், குல தெய்வத்தை இடையில் வழிபடாததால் வந்த தோஷம் விலகும். பரம்பொருளே மீன் உருவம் தாங்கி, பரமேஸ்வரனை வழிபட்டு, சுய வடிவத்தை மீட்டெடுக்கும் ஞானத்தையும் அடைந்ததால் மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முக்கியத் தலம் இது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com