அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமசுவாமி கோவில் Share

சேலத்தில் இருந்து கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அயோத்தியாப்பட்டணம். இங்கு ஊரின் மத்தியில் பிரசித்தி பெற்ற கோதண்டராமசுவாமி கோவில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ராமர் கோவில்கள் இருந்தாலும், அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமசுவாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு.

இடப்பாகத்தில் சீதாதேவி அமர்ந்திருக்க, பட்டாபிஷேக திருக்கோலத்தில் கோதண்டராம சுவாமி அருள்பாலிப்பது இந்த திருத்தலத்தில் மட்டுமே.

இந்த கோவில் கருவறையில் பட்டாபிஷேக கோலத்தில் ராமபிரான் தனது இடது காலை, வலது கால் மேல் வைத்து சுகாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்க... ராமபிரானின் இடதுபாகத்தில் சீதாதேவி பத்மாசன கோலத்தில் இடது காலை, வலது காலின் மேல் வைத்து, தனது வலது கையில் தாமரை மலரையும், இடது கை கீழ் நோக்கிய படியும் எழிலாக அமர்ந்து இருக்கிறார்.

சீதாதேவியின் இடது பக்கத்தில் லட்சுமணன் உடைவாள் ஏந்திய நிலையிலும், ராமரின் வலது பக்கத்தில் வெண்கொற்றக் குடையை பரதன் ஏந்தி நிற்கவும், வடக்கு பார்த்த நிலையில் சத்ருக்கனன் வெண்சாமரம் வீசுவது போலவும், அனுமன் இரு கை கூப்பி வணங்கிய நிலையிலும், மேற்கே சுக்ரீவன் வணங்கிய நிலையிலும், அங்கதன் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கின்றனர்.

அர்த்த மண்டபத்தில் விபீடணன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

இலங்கை வேந்தன் ராவணனை வதம் செய்த பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் அனைவரும் தங்கினார்கள்.

இதற்கிடையில் குறித்த நாளில் ராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்பட்டான். அப்போது ராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டினான்.

இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் ராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தனர்.

அப்போது ராமருடன் இருந்த விபீடணன் விடைபெற்றுக் கொண்டு இலங்கை செல்லும் போது, ராமரின் பட்டாபிஷேக கோலத்தை காணாமல், தான் இலங்கை திரும்புவதாக கூறி வருத்தப்பட்டான். இதைத்தொடர்ந்து விபீடணனுக்காக இந்த திருத்தலத்தில் ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி தந்ததாகவும், விபீடணன் அர்த்த மண்டபத்தில் அமர்ந்த நிலையில் இந்த திருக்காட்சியை தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com