Loading...

சேங்கனூர் கோவில் Share

சூரபதுமனை அழிப்பதற்காக மிக வலிமையான உருத்திர பாசுபதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருக்க முடிவு செய்தார் முருகப்பெருமான்.

அதற்காக அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். ஆனால் அங்கு சென்றபோது மணல் முழுவதும் சிவலிங்கமாக இருப்பதைக் கண்டார்.

இதனால் அங்கு நின்றபடியே சிவபெருமானை வேண்டி படைக்கலத்தை பெற்றார். சேய் ஆகிய முருகப்பெருமானுக்கு அருளிய தலம் என்பதால் சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. அழல் என்றால் நெருப்பு போன்ற சிவந்த மேனி கொண்ட சிவபெருமான் என்று பொருள். காலப் போக்கில் இப்பெயர் மருவி சேங்கனூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு சத்தியகிரி, குமாரபுரி, சண்டேஸ்வரபுரம் என்ற வேறு பெயர்களும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

இங்குள்ள இறைவன் சக்திகிரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானுக்கு படைக்கலம் வழங்கியதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இறைவனின் துணைவி என்று அழைக்கப்படும் பொருளில், இங்குள்ள அம்பாள் சகிதேவி என்ற திருநாமம் கொண்டுள்ளார். கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தனது நான்கு கரங்களில் அட்சரமாலையும், தாமரை மலரும், அபய, வரத முத்திரையும் காட்டி அருளியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாளின் அருகில் இரட்டை பைரவரும், சூரியர்– சந்திரரும் உள்ளனர்.

எல்லா சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர், இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகமிக இளய வயது கொண்டவரும், மற்ற நாயன்மார்களை விட காலத்தால் முந்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத்தலத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத வகையில், பிரகாரத்தின் வடக்குப்புறம் அர்த்தநாரி திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. கட்டு மலையின் கீழே மலை வாசலுக்கு அருகில் தெற்கு முகமாக வேல் வாங்க வந்த சுப்பிரமணியர் சன்னிதி அமைந்துள்ளது.

தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்தத் திருக்கோவில், காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில், நெடுங்கொல்லை என்ற கிராமத்தைத் தாண்டி சேங்கனூர் கூட்ரோடு உள்ளது. இங்கிருந்து வலதுபுறமாக பிரிந்து செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் புராண சிறப்பு மிக்க இத்திருத்தலத்தை அடையலாம்.

மன்னனிடம் தானம் பெற்ற இறைவன் :

சிபி சக்கரவர்த்தி தன் கிரக தோஷம் நீங்க, சிவாலயங்களில் தீர்த்த யாத்திரை செய்து வந்தான். அவ்வாறு இத்தலத்திற்கும் வந்து இறைவனை வழிபட்டான். பின்னர் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை முக்கிய இடங்களில் இருந்து 360 அந்தண தம்பதியரை இத்தலத்திற்கு வரவழைத்தான். வழியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அந்த தம்பதியரால் அங்கு வர முடியவில்லை. சிபி மகராஜன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடும், ஒரு கறவைப் பசுவும், சிறிது நிலமும் தானமாகக் கொடுத்து இத்தலத்திலேயே அவர்களைக் குடியமர்த்தினான்.

359 பேருக்கு தானம் கொடுத்த பிறகு, கடைசி தானத்தை பெற எவரும் இல்லை. இதனால் மன்னன் துயரம் அடைந்தான். அவனது வாட்டத்தைப் போக்கும் வகையில் இறைவனும், இறைவியும் வயதான உருவம் கொண்டு அங்கு வந்து மன்னன் கொடுத்த தானத்தைப் பெற்றுக் கொண்டனர். இதனால் மன்னன் மகிழ்ந்தான். அடுத்த நாள் ஒவ்வொரு வீடாகச் சென்று நலம் விசாரிக்கச் சென்றான். இறுதியாக வயோதிக அந்தணர் வீட்டுக்குச் சென்றான். வீடு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

கதவை உடைத்துத் திறந்தால் உள்ளே கயிலாசநாதரும், சிவலோகநாயகியும் காட்சி தந்தனர். இறுதியாக வந்து தன்னிடம் தானம் பெற்றவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த மன்னன் இறைவனை வணங்கி தன் இருப்பிடம் திரும்பினான். தற்போது அந்த இடம் சுவாமி வீடு என்ற பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com