Loading...

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டிலுள்ள ஊர், வல்லநாடு; இங்கிருந்து, 2 கி.மீ., தூரம் சென்றால், அகரம் என்ற கிராமம் வரும். இவ்வூரிலுள்ள தசாவதாரப் பெருமாள் கோவில், சிறப்பு மிக்கது. ஒர Share

மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாசலுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன.

கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன.

ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு.

கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன. இத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல.

பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார்.

ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com