சக்தி வழிபாடு Share

கொற்றமும் கொடியும் குலமும் கோட்டமும் மாசாணித்தாயே நெற்றியில் திருவும் வேப்பிலைத் தருவும் மாசாணித்தாயே படுத்த நிலையும் பாங்குடன் அரசும் மாசாணித்தாயே கொடுத்த வாக்கும் கோலமும் வாழ்வும் மாசாணித்தாயே

சக்தி வழிபாடு பழந்தமிழர்கள் காலத்தில் இருந்தே உள்ளது. பெண்களை போற்றும் இந்த வழிபாட்டுக்கு சாக்தம் என்று பெயர்.
கொற்றவை வழிபாடு, கண்ணகி வழிபாடு, மாரியம்மன் வழிபாடு போன்றவை எல்லாம் ஆதி தமிழர்கள் கண்ட வழிபாட்டு நெறிகளாகும். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சக்தி பீடங்கள் உள்ளன.

இவை தவிர ஆங்காங்கே காவல் தெய்வமாகவும் ஏராளமான சக்தி பீடங்கள் உள்ளன. இந்த சக்தி பீடங்களில் வன தேவதைகள் வழிபடப்படுகின்றன.
சில வனதேவதைகள் குறிப்பிட்ட குடும்ப வகையறாக்களுக்குள் முடங்கி விடாமல், ஊரையும், ஊர் மக்களையும் பாதுகாப்பது உண்டு. அந்த பெண் தெய்வங்கள் நாளடைவில் புகழ் பெற்று நாடே போற்றும் வகையில் மாறும்.

மக்கள் சாரை, சாரையாக படையெடுத்து வந்து, அந்த பெண் தெய்வத்தின் அருள் பெற்று செல்வார்கள். அப்படி புகழ் பெற்ற ஆலயம் தான், ஆனை மலையில் உள்ள அருள்மிகு மாசாணி அம்மன் ஆலயமாகும்.

தமிழ்நாட்டில் தென் எல்லையில் பகவதி தேவி காவல் தெய்வமாக உள்ளாள். மதுரையில் மீனாட்சி ஆட்சி நடக்கிறது. திருச்சியில் சமயபுரத்தாள் அருள் பாலிக்கிறாள். தொண்டை மண்டலத்தில் காஞ்சி காமாட்சி, சென்னையில் காளிகாம்பாள், திருவேற்காடு கருமாரி அம்மன் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் அனைவரிடம் இருந்தும் முற்றிலும் வித்தியாசப்பட்டவள் கொங்கு மண்டலத்தில் காவல் தெய்வமாக உள்ள அருள்மிகு மாசாணி அம்மன். ஆலய அமைப்பு, அம்மன் உருவ அமைப்பு, வழிபாட்டு நடைமுறைகள், பரிகார பூஜைகள் என்று எல்லா விஷயங்களிலும் மாசாணி அம்மன் மற்ற ஆலயங்களில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறாள்.

அதனால் தான் மாசாணி அம்மனை வணங்கி, அவள் அருள் பெற தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனை மலைக்கு படையெடுத்தபடி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாசாணி அம்மனின் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆண்டு தோறும் இத்தலத்தில் தை மாதம் நடத்தப்படும் தீமிதி விழா எனப்படும் குண்டம் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com