உலக கோப்பை டி20: கோஹ்லி அசத்தல்...அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா ! Share

உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை தீர்மானிக்கும் வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தின. மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்சும், கவாஜாவும் தொடக்கம் தந்தனர். கவாஜா அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 4 ஓவரில் 50 ரன்களை தொட்டது.

5-வது ஓவரில் நெஹ்ரா கவாஜாவை 26 ரன்னில் வீழ்த்தினார். அதன் பிறகு இந்திய பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா ரன்குவிக்க திணறியது. வார்னரை 6 ரன்னில் அஸ்வின் வீழ்த்தினார். கேப்டன் சுமித்தை 2 ரன்னில் யுவராஜ் வீழ்த்த ஆஸ்திரேலியா பேட்டிங் ஆர்டர் தடுமாற ஆரம்பித்தது.

பின்னர் வந்த பின்ச் 43 ரன்னில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 31 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். பால்க்கனர் 10 ரன்களில் அவுட் ஆக இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களிலும், தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த சுரேஷ் ரெய்னா 10 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 7.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்த நிலையில் யுவராஜ் சிங் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஒருகட்டத்தில் 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 59 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைபட்டது. நிதானமாக விளையாடிய கோஹ்லி 19 ஓவரில் விஸ்வரூபமாக 4 பவுண்டரிகளை விளாசினார்.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை சந்தித்த கேப்டன் டோணி (வின்னிங் சாட்) பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டினார். முடிவில் இந்திய அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (82), டோணி (18) அவுட் ஆகாமல் இருந்தனர். விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிவுடன் வருகின்ற மார்ச் 31-ம் தேதி இந்திய அணி மோதுகிறது. தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com