மகனை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து கலியாணம் கட்டச் சொன்னது எதற்காக? பெண்களே உசார்!! Share

கிராம பகுதியை சேர்ந்த சாதாரண குடும்பம். ஒரு மகனும், மகளும். மகனை வெளிநாட்டில் ‘பிளம்பர்’ வேலைக்கு அனுப்பிவைத்த தாயார், மகளுக்கு உள்ளூரில் மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார்.மகன் நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவன். சம்பாதிக்கும் பணத்தை அப்படியே தாய்க்கு அனுப்பிக்கொண்டிருந்தான். மகளின் திருமணத்திற்காக தாயார் அந்த பணத்தை எல்லாம் சேமித்துக்கொண்டிருந்தார்.

மகளுக்கு உள்ளூரில் பொருத்தமான வரன் ஒன்று அமைந்தது. மாப்பிள்ளை சுமாரான வேலையில் இருக்கிறார். இருக்கிற பணத்தைவைத்து தங்கையின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற மகிழ்ச்சி வெளிநாட்டில் வசிக்கும் சகோதரனுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள வசதிபடைத்த குடும்பத்தில் இருந்து சம்பந்தம் பேச சிலர் வந்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் வசதி வாய்ப்புகளை எல்லாம் பட்டியல்போட்டார்கள். ‘இந்த குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டால் உங்கள் மகள் மகாராணி போல் வாழ்வாள்’ என்றார்கள். அதற்காக அவர்கள் கேட்ட வரதட்சணை மிக அதிகமாக இருந்தது. ஏற்கனவே ஒத்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டாரைவிட 30 சவரன் நகை அதிகம் கேட்டார்கள்.

அம்மாவுக்கு ஆசை ஏற்பட்டது, மகளை வசதிபடைத்த வீட்டிற்கு மருமகளாக்கிவிடலாம் என்று! மகளோ, ‘30 சவரன் நகைக்கு எங்கே போவது? உள்ளூர் மாப்பிள்ளையே போதும்’ என்றாள்.

அம்மா வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனுக்கு போன் போட்டு, 30 சவரன் நகையை பற்றி சொன்னார். ‘இதுவரை உழைத்ததை எல்லாம் தங்கைக்காக சேர்த்துவைச்சிருக்கீங்க! இனி 30 பவுனுக்கு எங்கே போவது? அந்த நகையை வாங்க ஆறு ஏழு லட்சம் ரூபாய் செலவாகும். கடன் கேட்டாலும் யாரும் தரமாட்டாங்க. அதனால முதல்ல பார்த்த மாப்பிள்ளைக்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்திடலாம்’ என்றான்.

‘அதுக்கு நான் ஒரு வழி கண்டுபிடிச்சி வைச்சிருக்கேன். நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். பத்து, இருபது நாள் லீவு போட்டுக்கிட்டு ஒரு தடவை ஊருக்கு வந்திட்டு மட்டும் போ..’ என்றார்.

மகனும் ஒரு மாதம் கழித்து, 20 நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான். வீட்டில் காலடி எடுத்துவைத்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு அங்கே அம்மா பெண் பார்த்து வைத்திருந்தார். ‘இரண்டொரு நாளில் கோவிலிலே கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம்’ என்றார்.

‘தங்கைக்கு தானே மாப்பிள்ளை பார்த்தாய். எனக்கு ஏன் அவசர கல்யாணம்? நான் இன்னும் கல்யாணத்திற்கு தயாராகவில்லை’ என்றான், அதிர்ச்சியோடு!

‘உன் தங்கைக்காகத்தானே உனக்கு அவசர கல்யாணம் செய்துவைக்கப்போகிறேன். உனக்கு பேசி முடித்திருக்கும் பெண்ணுக்கு 40 பவுன் நகை போட சம்மதித்திருக்காங்க. கல்யாணம் செய்து உன் பொண்டாட்டியை இங்கேயே விட்டுட்டுபோ. அவளது நகையில 30 பவுனை எடுத்து, உன் தங்கைக்கு போட்டு பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்துகொடுத்திடலாம்’ என்று தனது திட்டத்தை சொன்னார், தாயார்.

‘உன் மகள் வாழ்க்கைக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும், என் வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கிறாயே இது நியாயமா?’ என்றான், மகன்.

இப்படியும் சில அம்மாக்கள் இருக்கிறதை நீங்களும் தெரிஞ்சுக்கணும்தானே!

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com