யாழ்ப்பாணத் திருநங்கை சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! (photos) Share

மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி.

எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன்.

பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன்.

ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு பெயரிட்டுள்ளேன். சுருக்கமாக மோனல் என்கிறார்கள். இன்னும் நிறையப் பெயர்களும் வைத்துள்ளனர்.

திருநங்கைகள் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமல் இப்போதும் அலி, ஒம்பது மாதிரியான கொச்சை வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் குறைச்சமூகத்தில், மோனல்களாக மாறிய பானுஜன்களும், பானுஜன்களாக மாறிய மோனல்களும் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவையல்ல.

தமது அடையாளங்களை நிரூபிக்க அவர்கள் குடும்பத்தில் தொடங்கி வசையாக பேசும் அறிமுகமேயில்லாத ஒவ்வொருவருடனும் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

வசை, பாலியல் சீண்டல், குடும்பத்திற்குள் தினம்தினம் நடக்கும் அடி, உதை, சித்திரவதைகளை கடந்துதான் திருநங்கைகள் தமது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு திருநங்கைக்கு பின்னாலும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கும் ஏராளம் கதைகள் உள்ளன. ஒவ்வொரு திருநங்கையும் வலியும், அவமானமும் நிறைந்த அந்த கதைகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

யாழ்ப்பாணத்தில் மிகச்சாதாரண குடும்பத்தில் பானுஜனாக பிறந்து இன்று மோனலாக மாறியது வரையான காலத்தை, அந்தக்காலம் என்னில் பதித்த ரணமான நினைவுகளை எனது அடையாளங்களை நிரூபிக்க நான் கொடுத்த விலைகளை தொடராக இந்தப்பகுதியில் எழுதவிருக்கிறேன்.

1998 இல் நான் பிறந்தேன். எனக்கு பெற்றோர் இட்டபெயர் பானுஜன். சிறுவயதிலிருந்தே நான் மிகுந்த மென்மையாக இருந்ததாக கூறுவார்கள். வீட்டுக்கு அண்மையிலிருந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டேன்.

பாடசாலை காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். பெண்களுடன் பழகுவதே எனக்கு இயல்பாக இருந்தது. அப்போது யுத்த நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்தது.

எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் இந்தியாவிற்கு அகதியாக சென்றது. அங்கு பாடசாலைக்கல்வியை தொடர்ந்தேன். பாடசாலையில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இருக்கை போடப்பட்டிருந்தது.

ஆனால் என்னால் ஆண்களின் வரிசையில் உட்கார முடியவில்லை. பெண்களின் வரிசைதான் எனது வரிசையென உண்மையாகவே உணர்ந்தேன். ஆனால், சில பெண்கள் சிரித்து சத்தமிட, ஆசிரியர் வந்து எனக்கு தண்டனை தந்தார். அத்துடன், ஆண்கள் வரிசையிலேயே உட்கார வேண்டுமென கடுமையான உத்தரவிட்டார்.

எனக்குள் என்ன பிரச்சனையென்பதை புரியவும் முடியவில்லை, அதை ஆசிரியருக்கு புரிய வைக்கவும் முடியவில்லை.

நாட்டுநிலைமைகள் ஓரளவு சீராக எனது குடும்பம் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியது. நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் என்னை சேர்த்தார்கள். நாளாகநாளாக நானொரு பெண் என்பதை தீவிரமாக உணரவும், நம்பவும் தொடங்கினேன்.

ஆண் தோற்றமிருந்தாலும், எனது உணர்வுகள் அனைத்தும் பெண்மைதான் என்பதை மெதுமெதுவாக உணரத் தொடங்கினேன். எனது ஒவ்வொரு அசைவிலும் பெண்மை மிகுந்திருப்பதாக நண்பர்கள் கேலி செய்வதை அப்போது சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

நாளாகநாளாக பிரச்சனைகள் எழத் தொடங்கின. எல்லாம் எனக்குள்ளான மனப்போராட்டங்கள்தான். ஒரு ஆணாக இருந்தும் மாணவர் வரிசையில் என்னால் உட்கார முடியாமலிருந்தது. மாணவர்களுடன் நெருங்கிப்பழகுவதை, ஒன்றாக உட்கார்வதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாமல் இருந்தது.

ஏதோ நெருப்பின் மேல் உட்கார்வதை போலிருந்தது. அப்படியான சமயங்களில் பதற்றமும், மனப்பயமும் கூடி இயல்பற்ற தன்மையாக இருந்தேன். இதனால், மாணவர் வரிசையிலும் இல்லாமல், மாணவியர் வரிசையிலும் இல்லாமல் இரண்டு வரிசைக்கும் நடுவில் உட்கார தொடங்கினேன்.

ஏழு, எட்டு வயதில் பெண்களிற்கு நடுவில் உட்கார ஆரம்பித்து, நான் யார் என குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பதின்னான்கு, பதினைந்து வயதில் நான் யார் என்பதை கண்டடைய தொடங்கினேன். எது என்னுடைய திசையென்பது புரிய ஆரம்பித்தது.

எங்கள் வகுப்பாசிரியர் ஒருநாள் என்னை தனிமையில் அழைத்து பேசினார். அவரிடம் அனைத்தையும் சொன்னேன். என்னால் ஆண்களுடன் உட்கார, ஒன்றாக பழக முடியாமலுள்ளதை சொன்னேன். எனக்குள்ளிருக்கும் பெண்மையை சொன்னேன். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச்சொன்னார்.

மறுநாள் பெற்றோர் பாடசாலைக்கு சென்று ஆசிரியரை சந்தித்தனர். அதுதான் பெற்றோருக்கு என்னைப்பற்றி கிடைத்த முதல் தகவல். ஆசிரியர் விடயங்களை கூறி, என் மாற்றத்தை புரிய வைத்து, கவனமாக பார்க்கும்படி ஆலோசனை கூறி அனுப்பியுள்ளார். நான் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர அன்று ஆரம்பித்தது பிரச்சனை.

அப்பா இயலுமானவரை என்னை அடித்தார். சாதாரண விடயங்களிற்கு அடித்தால், பெரிதாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன். ஆனால் அப்பா அடித்தது, “எனக்கு” எதிராக. எனது உணர்வு வெளிப்பாடுகளிற்கு எதிராக. பொம்பிளை மாதிரி திரிவியா எனக்கேட்டு அடித்தார். நான் அசையாமல் நின்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது.

அதன்பின் பாடசாலைக்குள் விரைவாக கதை பரவியது. எல்லா மாணவர்களும் என்னை இளக்காரமாக பார்க்க தொடங்கினார்கள். “ஏய் அலி” என கூப்பிட்டனர். பானுஜன் என்ற பெயர் மாறி அலியானது. அப்போது பாடசாலையில் இருந்த அதிபர், ஆசிரியர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. எனக்கு ஆறுதலாக இருக்கவுமில்லை.

“ஆணாக இரு.. ஆணாக இரு” என வீட்டில் அன்றாடம் தொடர்ந்த உடல், உள சித்திரவதைகள், தண்டனைகள், பாடசாலை அவமானங்கள் என சிறிய வயதிலேயே நான் சந்தித்த சவால்கள் அனேகம். இன்னொரு பிஞ்சு அதை எதிர்கொள்ளவும் கூடாது.

திருநங்கைகள் கல்வியில், வேலை வாய்ப்பில் உயர்ந்த இடங்களை அடைந்து, தனித்துவமானவர்களாக மிளிர்வதெனில் அவர்களின் இளமைக்காலம், பாடசாலைக்கல்வி சீராக, நெருக்கடியில்லாமல் இருக்கவேண்டும்.

அதற்கு அரசுகள் திருநங்கைகளை பாதுகாக்க, அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் தனியடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தில் வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

திருநங்கையாக இந்த உலகத்தில் நான் சந்திக்க ஆரம்பித்த பிரச்சனைகள், சவால்கள், அவமானங்கள் அனைத்திற்கும் பிள்ளையார் சுழியிட்டது அந்தப்பாடசாலை வாழ்க்கைதான்.அப்போது எனக்கு ஏற்பட்ட முதற்காதல், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விபத்துக்கள், இயல்பான உலகத்தைவிட்டு தள்ளிச்செல்ல வைத்ததெல்லாம் அதன் தொடர்ச்சிதான்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com