அந்த விசயத்துக்கு சோம்பல்படலாமா??? உளறுவாயன் என்ன சொல்கின்றான் கேளுங்கள்!! Share

தன்னிடம் வேலை பார்க்கும் பத்து ஊழியர்களும் சோம்பலாக இயங்குவதைக் கண்ட வியாபாரி, அவர்களில் டாப் சோம்பேறி யார் என்றுஅவர்களை அழைத்து, ``உங்களில் மிகவும் சோம்பலான ஆசாமிக்கு நான் பத்தாயிரம் ரூபாய் பரிசளித்து அவருக்கு இனி சுலபமான வேலையை மட்டும் தர முடிவு செய்துள்ளேன் என்றார். ஒன்பது பேர் கைகளை உயர்த்தினார்கள். அப்பாடா ஒருவராவது நம்மிடம் சுறுசுறுப்பாக உள்ளாரே என்று மகிழ்ந்த வியாபாரி கையை உயர்த்திய ஒன்பது பேரையும் திட்டி அனுப்பிவிட்டு கையை உயர்த்தாதவரிடம் ``உங்கள் சுறுசுறுப்பு என்னைக் கவர்ந்துவிட்டது என்றார். அதற்கு அவர் ``சார், நீங்க வேற, கையை உயர்த்துவதற்கு கொஞ்சம் சோம்பலாக இருந்தது என்றார்.

பட்டனை அழுத்தினால் காபியும், குளிர்பானங்களும் கொட்டோ கொட்டேன்று கொட்டுகிறது. ஊத வேண்டியதில்லை, கியாஸ் அடுப்பு எரிகிறது. காய்கறிகளை நறுக்க வேண்டியதில்லை, கட்டர் வெட்டுகிறது. கிளற வேண்டியதில்லை, கடைய வேண்டியதில்லை, எலக்ட்ரிக் குக்கரில், மைக்ரோ ஓவனில் சோறும், குழம்பும் ரெடி. குனிந்து வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை, அதற்குத்தான் புளோர் கிளீனர் இருக்கிறதே. மெனக்கெட்டு, கையால், காரைத் திறக்க வேண்டியதில்லை. கையை சுழற்றி கார் வின்டோவை ஒப்பன் செய்ய வேண்டியதில்லை; ரிமோட்டை அழுத்தினால் எல்லாம் தானாக நடக்கப்போகிறது. மனிதனா கொக்கா?


டெக்னாலஜியின் பரிணாம வளர்ச்சியில் மனிதனின் கை, கால் தோள்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கிறது. விளைவு; சுறுசுறுப்பின்மை, உடல் பருமன், பல்வகை நோய்கள், ஆயுள் குறைவு என உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து வந்துவிட்டது.

 
உலகில் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் உடற்பருமனால் விளையும் நோய்கள் 70 மடங்கு அதிகரித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உடலுக்கு போதிய வேலை கொடுக்காததால் பொதுவாக பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 டயாபட்டீஸ் எனப்படும் நீரிழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும் இப்போது இளைஞர்களிடத்திலும் காணப்படுவதாகவும் இந்நிறுவனம் எச்சரிக்கிறது. முரண்பாடான உணவு, மாசுப்பட்ட காற்று என இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் போதிய உடற்பயிற்சி இல்லாமைதான் பிரதான காரணம்.

 

தெருவில், மைதானங்களில் ஓடி ஆடிய குழந்தைகள் எங்கே? இதோ உடம்பு வளையாமல் கம்ப்யூட்டரில் ஆன்லைன் கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் எங்கே? பல மைல் தூரம் போட்டிபோட்டு நடந்த இளைஞர்கள் எங்கே? இதோ வீட்டிலேயே டிரெட்மில் வாயிலாக ஒரே இடத்திலேயே நடந்து கொண்டிருப்பவர்கள் எங்கே? சூரிய வெளிச்சம் உடலில் பட்டு வியர்த்தால் ஆரோக்கியம் தான் என்ற உண்மையை உணர்ந்து தெரு முனையில் உள்ள கடைக்குச் சென்று வந்த பெண்கள் எங்கே? இதோ வீட்டிற்குள் பேஸ் கிரீம் போட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் எங்கே?முதல் மாடிக்கும் லிப்ட். பத்தோடு பத்தைக் கூட்டுவதற்கும் கால்குலேட்டர்! பக்கத்து ரூமில் இருக்கும் அம்மாவுடன் பேச மொபைல் போன்! ஹாலில் கீழே விழுந்த பொருளை குனிந்து எடுக்க மனமில்லாமல் வேலைக்காரப் பெண் வரும் வரை வெயிட்டிங்! படுக்கையிலிருந்து எழுந்திருக்க யாராவது கையை நீட்டி உதவினால் தேவலை என்ற திங்க்கிங்.

அடுத்த ஸ்டாப்புக்கு செல்லக்கூட அங்கிள், என்னை அங்கு விட்டு விடுகிறீர்களா? என டுவீலர்களை நிறுத்தி லிப்ட் கேட்டு கெஞ்சும் பிள்ளைகள்! ஓடும் பாம்பை காலால் மிதிக்கும் பருவம் எங்கே போனது?

"நம் தேவைகள் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பல் அந்த கண்டுபிடிப்புகளின் மகளாவாள்.

"சோம்பல் கவர்ச்சிக் கன்னியாகத் தெரியலாம்; ஆனால் உழைப்பே நம் கதாநாயகி.

"சோர்வடைவதற்கு முன்பே எடுக்கும் ஓய்வுக்கு சோம்பல் என்று பெயர்... இவையெல்லாம் சோம்பல் குறித்து மேதைகள் சொன்ன கருத்துக்கள்.

சோம்பலால் அப்படி என்ன பெரிய தீமை வந்து விடப்போகிறது என்று கேட்கத் தோன்றும். உடல் சோம்பலானால் உள்ளம் சோம்பலடையும். உள்ளம் சோம்பல் பட்டால் உழைக்காமல் குறுக்கு வழியில் பயணிக்கத் தோன்றும். குறுக்கு வழியில் போக ஆரம்பித்தால் ஏமாற்றுதல், கொலை, கொள்ளை, லஞ்சம், வன்முறை என சீர்கேடுகள் பெருகும். மேலும், உடல் பிரஷ்ஷாக இல்லையெனில் உள்ளம் மந்தமாகி விடுகிறது. இதனால் கோபம், டென்ஷன், விரக்தி போன்ற தீயகுணங்கள் உள்ளத்தில் பற்றிக்கொள்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்வின் முதல்படி சோம்பலை விரட்டுவதுதான்.

சேமிப்பது சம்பாதிப்பதற்குச் சமம் என்ற கூற்று மின்சாரம், நீர், எரிபொருள் போன்ற வளங்களைப்போலவே, பணத்திற்கும் பொருந்தும், ஆம், சிறு சிறு வேலைகளைச் செய்து இயற்கையான உடற்பயிற்சியை செய்து வந்தால் பிற்காலத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு செலவிட நேரிடும் ஆயிரங்களை நிச்சயம் மிச்சப்படுத்தலாம். பணமும் மிஞ்சும், ஆயுளும் தங்கும்.

டெக்னாலஜியை ஒரு சதவீதம் கூட குறை சொல்வது நியாயம் ஆகாது. ஆனால் டெக்னாலஜி விடுக்கும் சவால்களை சமாளிக்க நம் உடல் தயாராக இருக்க வேண்டும். நான்காவது மாடியில் உள்ள ஒரு ஜிம்மை அடைய தினமும் லிப்ட்டை பயன்படுத்திய நான்கு வாலிபர்களைப் பார்த்து ஒரு பெரியவர் சொன்னார். ``தம்பிகளா, பதினெட்டு வயதில் நான்கு மாடி ஏற படிக்கட்டுகளைப் பயன்படுத்த சோம்பல்படும் நீங்கள் எவ்வளவு எக்சசைஸ் செய்தும் பயனில்லை. உடல் சுறுசுறுப்பாக இயங்க முதலில் உள்ளம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றார்.


நம் உடல் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொண்டுவிட்டாலே அந்த உடல்மீது நமக்கு அக்கறை வந்துவிடும். உடலை ஒரு நேர்மையான அக்கவுண்டன்ட் என்று சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவு இந்த உடலுக்கு கிடைக்கும் வருமானம். தூங்குவது, ஓய்வெடுப்பது போன்றவை வட்டிக்கணக்கில் சேர்ந்துவிடும். அப்படியென்றால் செலவு? வேலைகள் மூலம் உடலை வருத்திக் கொள்வதும், அவ்வப்போது நடப்பதும், ஓடுவதும்தான். இவ்விஷயத்தில் வருமானமும், செலவும் சமமாக வேண்டும். இல்லையெனில் பிரச்சினைதான். நாம் உண்ணும் உணவு கலோரிகளாக செலவு செய்யப்பட வேண்டும் என்ற அளவில் இந்த அக்கவுண்டிங் உதாரணத்தில் அறிவியலும் அடங்கி உள்ளதை கவனிக்க வேண்டும்.

 
சரி சோம்பலை எப்படித்தான் முறியடிப்பது? வாரத்தில் ஆறு நாள் மிக்சி சட்னியை செய்யட்டும். ஒரு நாள் அதை அம்மியில் அரைத்து நாம் செய்தால் வாய்க்கும் டேஸ்ட்; உடலுக்கும் பெஸ்ட்; பாவம் அந்த மெஷினுக்கும் ரெஸ்ட்! இப்படி துணி துவைத்தல், மாவு ஆட்டுதல் போன்ற வேலைகளை வாரம் ஒரு முறையாவது மெஷினைப் பயன்படுத்தாமல் செய்தால், ஆண்களுக்காக அனுதினமும் உழைக்கும் நம் பெண்குலத்தின் உடலுக்கும், ஆயுளுக்கும் நல்லதுதானே.

சோம்பல் என்பது நம் உடல் நம் உள்ளத்திற்கு விடும் சவால். அதை கொஞ்சம் நெகட்டிவ்வாக அணுகினால் பறந்து போய் விடும். படிக்கும் மூடு இல்லாதபோது கொஞ்ச நேரம் படிக்க வேண்டும். படுக்க வேண்டும் போல் உணர்ந்தால் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். தூங்க வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது கொஞ்ச நேரம் விழித்திருக்க வேண்டும். `இதற்கு மேல் என்னால் முடியாது  என உடல் சொல்லும் போது  நான் இருக்கிறேன்  என உள்ளத்தை உசுப்பி விட வேண்டும்.

இதை, இதற்குள் முடிக்க வேண்டும் என்ற பணி பயமும் நம் மனதில், உடலில் சோம்பலை உண்டாக்கும். இதன் மூலம் புரோகிராஸ்டினேஷன் எனப்படும் முக்கிய வேலைகளைக்கூட தள்ளிப்போடும் குணம் வளரும். எனவே செய்ய வேண்டிய ஒரு பெரிய வேலையை திட்டமிட்டு தேவைப்படின் சில பாகங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு டெட்லைன் கொடுத்து முடித்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவோ, திட்டமிட்டோ, உடலை பயிற்சியில் ஈடுபடுத்த நமக்கெல்லாம் நேரமில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், குடும்பத்தில் ஜாலியாகவே உடற்பயிற்சி செய்ய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

- வீட்டில் ஞாபக மறதியால் சிறிய தவறுகள் செய்பவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்லுதல்...

- மொட்டைமாடியில் பத்து துணிகளைக் காயப்போட பத்துமுறை ஏறி இறங்கும் பழக்கத்தை எப்போதாவது பின்பற்றுவது...

- புடவை, லுங்கி போன்ற நீண்ட துணிகளை நாமே அயர்ன் பண்ணுவது...

- வீட்டில் கை பம்ப் அமைத்து தினம் இரண்டு பக்கெட் நீரை இறைப்பது...

- வீட்டில் டி.வி.யில் வரும் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது...

போன்று ஜாலியாக செய்யும் சிறு சிறு வேலைகள் எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் உண்டாக்கும் பெரிய எக்சைஸ் ஆகும்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவது ஒரு சுகமான, சுவையான அனுபவமாகும். அதை நாமெல்லாம் பெற தள்ளிப் போடுதலுக்கு கொள்ளி போடுவோம்.

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..