கணவரின் கழுத்தை அறுத்து கொன்று உடலை புதைத்த கொடூர மனைவி Share

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 30). இவருடைய மனைவி இந்து (25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஜியோன் என்ற 2½ வயது மகன் உள்ளான். ஜஸ்டின் புதுடெல்லியில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின், தனது மனைவியுடன் ஓசூர் வந்தார். ஓசூரில் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். இதனிடையே கடந்த 20-ந் தேதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் மத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் கோபு முன்னிலையில் இந்து நேற்று சரண் அடைந்தார். தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (30) உதவியுடன் தான் கொலை செய்து மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கோபு மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இந்துவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் பூஷண்குமார், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை ஜஸ்டினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு உடலை டாக்டர்கள் புவனா, ஸ்டாலின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஜஸ்டினின் மனைவி இந்துவிற்கும், கூடலூரைச் சேர்ந்த லிண்டோவிற்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் இருந்து ஊருக்கு திரும்பிய ஜஸ்டின் தனது மனைவி இந்துவுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஓசூரில் குடியேறினார். அங்கு அவர் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து தனது கள்ளக்காதலன் லிண்டோவிற்கு போன் போட்டு ஓசூர் வரவழைத்தார்.

கடந்த 20-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் ஜஸ்டினை, கள்ளக்காதலன் லிண்டோ உதவியுடன் இந்து வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு கள்ளக்காதலன் லிண்டோ வந்த காரில் ஜஸ்டினின் உடலை ஏற்றி மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இந்த கொலையில் தப்பி ஓடிய லிண்டோவை போலீசார் தேடி வருகிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் உதவியுடன், மனைவியே கழுத்தை அறுத்து கொன்று உடலை புதைத்த வெறிச்செயல் ஓசூரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..