கைதிகளின் உயிரை எடுத்து சாட்சிகளுக்கு பாதுகாப்பா? Share

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

 
வவுனியாவில் இதுகாறும் நடந்துவந்த குறித்த அரசியல் கைதிகளின் வழக்கு அண்மையில் அநுராதபுர நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
வவுனியாவில் நடந்த வழக்கை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியதால், தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு பிரச்சினையை எதிர் கொண்டுள்ளனர்.
 
அதில் மொழி மற்றும் சட்டத்தரணிகளின் உதவி என்பன முக்கியமானவை.
 
வவுனியா நீதிமன்றில் நடந்த வழக்கை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்குக் கூறப்படுகின்ற காரணம் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாகும்.
 
சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், யாரால் பாதுகாப்பு இல்லை என்ற கேள்வி எழும்.
தவிர, குறித்த சாட்சிகளுக்கு இதுவரை பாதுகாப்புக் கொடுத்தது யார்? அவ்வாறு பாதுகாப்புக் கொடுத்தவர்கள் இப்போது பாதுகாப்புக் கொடுக்க மறுக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுவதிலும் நியாயம் உண்டு.
 
எதுவாயினும் தமிழ் அரசியல் கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு போகும்போது அவர்களின் பாதுகாப்புப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா!
 
போருக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
 
அந்தவகையில் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அல்லது புலிகள் அமைப்பில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட நெடுங்காலமாக விளக்கம் விசாரணையின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கியிருக்க வேண்டும்.
 
ஒரு புறத்தில் விடுதலைப் புலிகள் அமைப் பில் இருந்த முக்கிய புள்ளிகளுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களும் படைத்தரப்பினரும் மறு புறத்தில் புலிப் போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் அல்லது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்களை அரசியல் கைதிகளாக சிறைகளில் தடுத்து வைப்பது என்பது அடிப்படை நியாயமற்றது.
 
இவ்வாறு நீதிக்குப் புறம்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற பேரில், வவுனியா நீதிமன்றில் நடந்த வழக்கை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றி அரசியல்கைதிகளை அவலநிலைக்குத் தள்ளுவது நல்லாட்சிக்கு அழகல்ல.
 
எனவே தமிழ் அரசியல்கைதிகளின் கோரிக்கைகளுக்கும் அவர்களின் விடுதலைக்கும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவற்றைச் செய்யாதபோது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசு தொடர்ந்தும் முன்னெடுக்கிறது என்ற மனநிலை தமிழ் மக்களின் ஆழ்மனங்களில் பதியவே செய்யும். 
Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..