அம்பாறையில் மகளை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தைக்கு 18 வருட கடூழிய சிறை!! Share

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் தனது 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தினால் 18 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 03 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்களுக்கு சாதாரண சிறைத் தண்டனையும் நட்டஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் 01 வருட சாதாரண சிறைத் தண்டனையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

2010.02.26 ஆம் திகதியன்று இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (6) புதன்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அன்றைய தினம் தனது மகள் மீது வன்புணர்வு மேற்கொண்டமை தொடர்பாக தந்தை மீது அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சட்ட மா அதிபரால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 364 (03) க்கு அமைவாக குற்றப்பகிர்வு பத்திரம், குறித்த குற்றவாளிக்கு எதிராக 2017.02.21 ஆம் திகதி கல்முனை மேல்நீதிமன்றில் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் நேற்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..