சூரிய ஒளியும் விற்றமின் டி உம் உடலுக்கு தரும் நன்மைகள் - யாழ் பொது வைத்திய நிபுணர் Share

நாம் சிறுவர்களை வெயிலில் நிற்காதே, மழையில் நனையாதே என்ற கட்டுப்பாடுகளுடன் நலன் சார்ந்த கடப்பாடுகளைப் பேணி வருகின்றோம். வெயிலைத் தவிர்க்கக் குடை தொப்பி, நீளமான ஆடைகள்,

சூரிய ஒளி யைத் தடுக்கும் பூச்சுக்கள் எனப் பல்வேறு விதமான பொருள்களைப்பாவிக்கின்றோம். உண்மையில் இந்த விடயங்கள் எவ்வளவுதூரம் சரியானது என்பது கேள்வி நிலைக்குட்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது.

சூரிய ஒளியிலுள்ள புறஊதா கதிர்கள் (UltraViolet Brays) எமது தோலில் விற்றமின் டி உற்பத்தியாவற்கு அவசியமாகிறது. எமக்குத் தேவையான விற்றமின் டி இல் பெரும் பகுதி குறிப்பாக 90 தொடக்கம் 95 வீதமானவை சூரிய ஒளி மூலமாகவே தோலில் உற்பத்தியாகின்றன. போதிய சூரிய ஒளி நேரடியாகத் தோலில் படாவிட்டால் விற்றமின் டி குறைபாடு ஏற்பட்டும் பல நோய்கள் ஏற்படலாம்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி உலகில் பலருக்கு விற்றமின் டி பற்றாக்குறையிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி குறைவில்லாமல் கிடைக்கும் இலங்கை போன்ற நாடுகளிலும் விற்றமின் D குறைபாடு பலருக்கு இருப்பதென்பது அதிர்ச்சிகரமான விடயமாகும்.

வெள்ளையர்களைவிடக் கறுப்பானதோலுடைய ஆசிய நாட்டவர்களில் தோலில் அதிகம் காணப்படும் மெலனின் (Melanin) எனும் நிறப் பொருளாளால் சூரிய ஒளி தோலினுள் ஊடுறுவுவது குறைவடைகின்றது. இதனால் வெள்ளையர்களை விட ஆசிய நாட்டவர்களான நாம் அதிக நேரம் சூரிய ஒளியை உடலில் படவிட வேண்டும். இடம் பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் வாழும் ஆசிய நாட்டவர்களில் அதிலும் குறிப்பாகப் பெண்களில் விற்றமின் டி குறைபாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் எம்மவர்கள் குளிர் காரணமாக உடலை மூடி உடைகளை அணிவதும் வீட்டை விட்டு வெளியில் வருவது குறைவாக இருப்பதுமேயாகும்.

சூரிய ஒளியும் விற்றமின் டி உம் உடலுக்கு தரும் நன்மைகள்

விற்றமின் டி ஆனது கல்சியம் அகத்துறிஞ்சப்படுவதற்கு அவசியமாகும். ஆக எலும்பு பல் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி அவசியமாகிறது. குறிப்பாக மாதவிலக்கு நின்றபின் பெண்களில் ஏற்படும் ஒஸ்ரியோபுறோசிஸ் (osteoporosis) எனும் நோய்க்கு கல்சியம் குறைவது காரணமாக விளங்குகிறது.
சூரிய ஒளியினால் எமது உடலில் கிறோரொனின் (Serotonin) எனும் ஹோர்மோன் அதிகமாகச் சுரக்கப்படுகின்றது. இந்த ஹோர்மோன் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றது. சூரிய ஒளி குறைந்த குளிர்காலங்களில் மேலைத்தேய நாடுகளில் நரம்புச்தளர்ச்சி அதிகம் ஏற்படுகின்றது,
சூரிய ஒளியானது உடலின் கொலஸ்ரோல் அளவு, குருதியமுக்கம் என்பவற்றைக் குறைக்கின்றது. வெயில் குறைந்த குளிர்காலங்களிலேயே மாரடைப்பு பொதுவாக ஏற்படுகின்றது. எனவே சூரிய வெளிச்சம் மாரடைப்பை குறைக்கின்றது என்பதை ஊகிக்கலாம்.
அதுமட்டுமா! சூரியஒளி உடலில் படுவதலால் உடல் பருமன் குறைவடைவதுடன் நீரிழிவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளியினால் உடல்நோ மூட்டுவாதம் என்பன குறைவடைகின்றன.
அதிகமான சூரியஒளி குறிப்பாக வெள்ளையர்களின் தோலில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். ஆனால் அளவான சூரியஒளி உடலில் படுவதால் பல்வேறு விதமான புற் றுநோய்கள் ஏற்படுவது குறைவடைவதாக அண்மையில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்புப் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், இரப்பைப்புற்று நோய் என்பன அவற்றில் சிலவாகும்.
மிதமான சூரிய ஒளியினால் மாதவிலக் குப் பிரச்சினைகள் குறைவடைகின்றன. அத்துடன் மாதவிலக்கு நிற்பதும் தள்ளிப் போகப்படுகின்றது. குறிப்பாக ஆண்மைத் தன்மை அதிகப்படுவதுடன் பெண்களில் குழந்தைப் பேற்றுக்கான சாத்தியங்கள் அதிகப்படுத்தப்படுகின்றன.
சூரியஒளி உடலில் படுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது.

சூரியஒளி தவிர விற்றமின் டி ஐப் பெறக்கூடிய வழி மூலங்கள்

விற்றமின் டி சில உணவுகளிலேயே காணப்படுகின்றது. தன்மையுள்ள ருனா சமன் (Tunasaman) போன்ற மீன்களில் விற்றமின் டி காணப்படுகின்றது. பால், முட்டை என்பவற்றிலும் விற்ற மின் டி காணப்படுகின்றது. ஆனால் உணவு மூலம் எடுக்கப்படும் விற்றமின் டி உடலுக்குபோதுமானது அல்ல. விற்றமின் டி உள்ள மாத்திரைகள் இப்போது பாவனையில் உள்ளன. ஆனாலும் இந்த வகையில் எடுக்கப்படும் விற்றமின் டி யால் மேற்குறிப்பிட்ட நன்மைகள் அதிகம் கிடைப்பதில்லை என ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. எனவே இலவசமாக எங்கும் கிடைக்கும் சூரிய ஒளியை நாம் ஏன் அதிகம் பயன்படுத்தக்கூடாது.

ஒருநாளைக்கு உடலில் படவேண்டிய சூரிய ஒளியின் அளவு

ஒருநாளைக்கு உடலில் பட வேண்டிய சூரிய ஒளியின் அளவு ஆசிய நாட்டவர்களான நாங்கள் ஒவ்வொரு நாளும் அண்ணளலாக அரைமணிநேரம் வெய்யிலில் நின்றால் போதுமானதாகும்.

குறிப்பாக காலை 6 மணிதொடக்கம் 10 மணிவரை அல்லது மாலை 4 மணிமுதல் 6 மணி வரையுள்ள நேரத்தில் சூரியஒளி படத்தக்கவாறு நிற்கலாம்.

இந்த நேரத்தில் உடற்பயிற்சி அல்லது நடப்பதனால் எமக்கு இரட்டிப்பு நன்மை ஏற்படும். ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் குறை வான ஆடைகளுடன் அரைமணி நேரம் வெயிலில் நின்றால் அவருக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் சர்வதேச அலகு விற்றமின் டி உடலில் உற்பத்தியாகின்றது. இவ்வளவானது நாளொன்றுக்கு போதுமான தெனக் கூறப்படுகின்றது.

எனவே விலையுயர்ந்த மருந்துகளை நாடிச் செல்லும் நாம் இயற்கையான சூரிய ஒளி, கடற்கரைக் காற்று இயற்கை அழகு என்பவற்றை பயன்படுத்தலாம். எமது உடலும் உள்ளமும் நலன் பெறும் வெயிலில் நின்றால் முக அழகு குன்றிவிடும் என பயப் பாடாதீர்கள். காலை, மாலை நேர வெயிலால் ஏற்படும் நன்மைகள்பலவாகும்.

மருத்துவர்.S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..