சலரோகத்தை குணமாக்குவேன்!! ஆசை வார்த்தை காட்டி வைத்தியர் செய்த திருவிளையாடல்!! Share

சலரோகத்தை குணமாக்குவேன்!! ஆசை வார்த்தை காட்டி வைத்தியர் செய்த திருவிளையாடல்!

சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், நாளடைவில் உடல் கெட்டு மிகவும் பலவீனம் ஆகிவிடுவார்கள். எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு கேரளா ஆயுர்வேத மருத்துவம்தான் சிறந்தது என்ற விளம்பரம், ஓசூர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, பெங்களூர் வரை சர்க்கரை நோயாளிகள் கேரளா ஆயுர்வேத மருத்துவர் சஞ்சய்யைத் தேடிவர வைத்தது.

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே, இந்த இடம் போதுமானதாக இல்லை. மருத்துவமனைக்காகக் கட்டடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். புதிய கட்டடம் அமைக்கப் பாதி பணத்தை நான் தருகிறேன். மீதி பணத்தை நீங்க கொடுங்கள் என்று கட்டட உரிமையாளர் உஷாவிடம் பேசி, ரூ.20 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார், சஞ்சய். அதே சமயத்தில், கிருஷ்ணகிரியில் மதிவாணன் என்பவரிடம் சர்க்கரை நோயாளிகளுக்கான புதிய கிளினிக் ஆரம்பிக்க ரூ.45 லட்சமும், திருச்சியில் உமாசங்கர் என்பவரிடம் ரூ.60 லட்சமும் வாங்கியுள்ளார். இது தவிர, பெங்களூரிலிருந்து மருத்துவம் பார்க்க வந்த நோயாளிகளிடம், சர்க்கரை நோய்க்கு முதல் தர சிகிச்சை பார்ப்பதாக ரூ.20 லட்சம் வசூல்செய்த சஞ்சய், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் இடத்தைக் காலிசெய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். புகார்கள் போலீஸாரிடம் செல்லவே, சஞ்சயைப் பல இடங்களில் தேடியும் கைக்கு சிக்காமல் தலைமறைவாகவே வாழ்ந்துவந்தார்.

இந்த நிலையில், ஓசூரைச் சேர்ந்த உஷாவிடம் தொலைபேசியில் பேசிய சஞ்சய், உங்களுக்குத் தரவேண்டிய பணத்தை திரும்பித் தந்துவிடுகிறேன். நாமக்கல்லுக்கு வாங்க என்று அழைத்துள்ளார். பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உஷா, விஜியேந்திரன், கோபிகிருஷ்ணன் மூவரும் நாமக்கல்லுக்குச் சென்றுள்ளனர். மூவரையும் சஞ்சயுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிகொண்டதோடு, உஷா கழுத்தில் இருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு, ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவம், நாமக்கல் மாவட்ட எஸ்பி. அருள்அரசு கவனத்துக்கு வரவே தனிப்படை அமைத்து கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த இடத்தைச் சுற்றிவளைத்த தனிப்படையினர், கடத்தல் கும்பலைச் சேர்ந்த நவீன், ஆனந்த் லோகேஷ், மனோஜ், சீனிவாசன், கிருஷ்ணராஜ், சந்திரகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், உஷா உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டனர்.

இதுகுறித்து நாமக்கல் போலீஸார் கூறுகையில், சஞ்சய்மீது தமிழகம் மட்டுமல்லாமல், கேரளாவிலும் பல மோசடி வழக்குகள் உள்ளன. தற்போது, ஆள் கடத்தல் வழக்குப் பதிவுசெய்துள்ளோம். இதுதவிர, சஞ்சையிடம் உதவியாளராகப் பணியாற்றிய பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அதுகுறித்த புகார் எதுவும் இல்லாததால், தற்போது மோசடி, ஆள் கடத்தல் வழக்கு மட்டும் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..