தங்கையின் கணவரை 15 இடங்களில் குத்திக்கொன்ற அண்ணன்!! எதற்காக? Share

தங்கையின் கணவரை 15 இடங்களில் குத்திக்கொன்ற அண்ணன்!! எதற்காக?

சென்னை ஆவடியில், டைவர்ஸ் கொடுக்காத தங்கையின் கணவரைக்  குத்திக் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

 சென்னை ஆவடியைச் சேர்ந்தவர், ஜெயகோபால். செல்போன் கடையில் வேலைபார்த்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடி அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தகவலை அறிந்ததும், உதவி கமிஷனர்கள் நந்தக்குமார், கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அடுத்து, ஜெயகோபாலின் உடலைக் கைப்பற்றிய ஆவடி போலீஸார், கொலை தொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலையுண்ட ஜெயகோபாலின் உடலில் 15-க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனால், அவர்மீது ஆத்திரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர். அதுதொடர்பான விவரத்தைச் சேகரித்தபோதுதான், ஜெயகோபால் மனைவியின் அண்ணன் பிரபாகரன்மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் பிரபாகரன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரின் அப்பா பழனியை போலீஸார் கைது செய்தனர்.  

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ஜெயகோபாலுக்கும் ஆவடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பவித்ரா என்கிற பெண்ணுக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். விவாகரத்து கேட்டு பவித்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சமயத்தில் ஜெயகோபால், விவாகரத்து கொடுக்க மறுத்துள்ளார். சம்பவத்தன்று, ஜெயகோபாலை அழைத்துச்சென்று மதுவாங்கிக் கொடுத்துள்ளார், பவித்ராவின் அண்ணன் பிரபாகரன். அப்போது, விவாகரத்து வழக்கு தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். அதன் பிறகு, கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார் ஜெயகோபால்" என்றனர்.

 ஜெயகோபாலின் சகோதரி ஹேமலதா கூறுகையில், "பவித்ராவை காதலித்து திருமணம் செய்தார் ஜெயகோபால். திருமணமான தொடக்கத்தில், இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தனர். இடையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பவித்ரா பிரிந்து சென்றதோடு, டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே பவித்ரா வீட்டினர் எங்களுக்கு பல வகையில் தொல்லைகொடுத்தனர். அதையெல்லாம் அமைதியாகப் பொறுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அண்ணனை இப்படிக் கொல்வார்கள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவரை இழந்து தவிக்கிறோம். அவருக்குப் பிறந்த குழந்தையைக்கூட எங்களிடமும் அண்ணனிடமும் கடைசிவரை காட்டவில்லை" என்றார் கண்ணீருடன்.

  ஜெயகோபால் அவரது மனைவி பவித்ரா

பவித்ரா தரப்பில் பேசியவர்கள், "குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜெயகோபாலால் பவித்ரா பல டார்ச்சர்களை அனுபவித்தார். ஒருகட்டத்தில், அவருடன் வாழ முடியாமல் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன் பிறகும் ஜெயகோபாலின் தொல்லை தொடர்ந்தது. இதனால்தான் டைவர்ஸ் கேட்டார். அதைக்கூட கொடுக்காமல், ஏழு ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்தார். பவித்ராவுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாது. குழந்தையுடன் அந்தப் பெண் வாழாவெட்டியாக மிகவும் சிரமப்பட்டார். தற்போது, ஜெயகோபாலைக் பவித்ராவின் அண்ணன் பிரபாகரன் கொலை செய்ததாக, அவரையும் பவித்ராவின் தந்தை பழனியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். ஜெயகோபாலைத் திருமணம் செய்ததற்காகப் பவித்ராவின் குடும்பமே நிம்மதி இழந்துவிட்டது" என்றனர்.

 இந்தக் கொலையைக் கண்டுப்பிடித்தது எப்படி என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெயகோபால் கொலை செய்யப்பட்டதும், அவரது செல்போனுக்கு கடைசியாகப் பேசியவர்களின் விவரத்தைச் சேகரித்தோம். அடுத்து, மது அருந்திய பாரிலும் விசாரித்தோம். ஏற்கெனவே, ஜெயகோபாலுக்கும் அவரின் மனைவி குடும்பத்தினருக்கும் உள்ள பிரச்னை இருந்துவந்தது. ஜெயகோபால் இறந்த நாளிலிருந்து அவரின் மனைவி குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை நடத்தி, பிரபாகரன்  அப்பா பழனியை  கைது செய்துள்ளோம்.   பிரபாகரன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார்.இவர்கள், பாடியில் லேத் பட்டறை நடத்திவருகின்றனர்.

பிரபாகரனிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைக் கைப்பற்றியுள்ளோம். சம்பவத்தன்று, ஜெயகோபாலைக் கத்தியால் குத்திவிட்டு பிரபாகரன் சென்றுவிட்டார். நீண்ட தூரம் சென்றபிறகு, அவரது செல்போன் கொலை செய்யப்பட்ட இடத்தில் தவறவிட்டது தெரியவந்துள்ளது. இதனால், செல்போனை எடுக்க அவர் வந்துள்ளார். அப்போது, ஜெயகோபால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனால், மீண்டும் அவரைக் கத்தியால் குத்திவிட்டு, இறந்தபிறகு சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்" என்றார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..