கள்ளத் தொடர்பால் நடந்த பயங்கரம்! சென்னையில் மகனைக் கடத்திக் கொலைசெய்த தாய் Share

சென்னையில், பள்ளி மாணவன், கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், உள் அலங்கார வேலை செய்துவருகிறார். இவர், மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மஞ்சுளா, மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ரித்தேஸ் சாய் என்ற 10 வயது மகன் இருந்தார். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். இந்தநிலையில் ராமாபுரத்தில் உள்ள ஒருவீட்டில் இந்தி டியூசன் படிக்கச் சென்ற ரித்தேஸ் சாய், வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் ரித்தேஸ்சாயைத் தேடிவந்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கார்த்திகேயனுக்குத் தெரிந்தவர் சேலையூரைச் சேர்ந்த நாகராஜ். இவர், சில நேரங்களில் ரித்தேஸ் சாயை வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு. சம்பவத்தன்றும் ரித்தேஸ் சாயை நாகராஜ் பைக்கில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனால், நாகராஜை போலீஸார் தேடினர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸார், நாகராஜை தேடியபோது அவர் தலைமறைவாக இருக்கும் இடம், போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸார் மடக்கிப்பிடித்து ரித்தேஸ் சாய் குறித்து விசாரித்தனர். அப்போதுதான் ரித்தேஸ் சாய் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. டியூசனிலிருந்து ரித்தேஸ் சாயை அழைத்துச் சென்ற நாகராஜ், மதுபாட்டிலால் அவரை அடித்துக் கொலை செய்ததாகப் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அடுத்து, ரித்தேஸ் சாயின் உடலை, சேலையூரில் புதைத்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி வரும் நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதைக் கார்த்திகேயன் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. போலீஸ் நிலையத்தில் நாகராஜ், மஞ்சுளாவை எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது. அதன்பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. இருவரும் பேசிக்கொண்டிருந்ததை, ரித்தேஸ் சாய் நேரில் பார்த்து தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரத்தில்தான் ரித்தேஸ் சாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் நாகராஜை கைது செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.


இந்த கொலைக்கு மஞ்சுளா ஐடியா கொடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. மகனின் கொலைக்கு மஞ்சுளாவும் காரணம் என்று அவரது உறவினர்கள் போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளளனர்.  இந்த வழக்கு தொடர்பாக மஞ்சுளாவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜிடம் கேட்டதற்கு, விசாரணையின் முடிவில்தான் மஞ்சுளாவை கைதுசெய்வதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.  நாகராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்துள்ளோம் என்றார்.

இதற்கிடையில், ரித்தேஸ் சாயைக் கொன்றதுகுறித்து போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார், நாகராஜன்.

 "மஞ்சுளாவிடம்  நான் பழகியது கார்த்திகேயனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் குடும்ப நண்பர்களைப்போல என்னை நடத்தியவர்கள், மஞ்சுளாவுக்கும் எனக்கும் உள்ள நட்பு தெரியவந்த பிறகு, அந்த வீட்டில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். குறிப்பாக, கார்த்திக்கேயன் மீது எனக்கு கடும் கோபம் இருந்தது. அவரைப் பழிவாங்க, ரித்தேஸ் சாயைக் கடத்தினேன். சேலையூரில் நான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவரை அழைத்துச்சென்றேன். மது குடித்த பிறகு, என் மனம் மாறியது. இதனால், இரும்பு ராடால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதன்பிறகும் ஆத்திரம் தீரவில்லை. இதனால், மதுபாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்தேன். போதை தெளிந்த பிறகுதான் பயம் வந்தது. ரித்தேஸ் சாயின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், வேலூருக்கு தப்பிச்சென்றேன். செல்போன் டவர்மூலம் சிக்கிக்கொண்டேன்" என்று போலீஸாரிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தாயின் தவறான நட்பால், 10 வயது மகனை இழந்து அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..