ஓர் வளவில் குடியிருந்தோம்!! பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்!! Share

ஓர் வளவில் குடியிருந்தோம் எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

உங்கள் ரகசிய நடமாட்டங்களின்
காலடிச் சத்தங்கள்
எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க
எதேச்சையாகத் தான் கவனித்தோம்
விசாரிக்கத் தொடங்கிய வேளை
அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது
எமை நீர் அறுப்பதற்கு தயாரான
ஆயிரம் தடையங்கள்

கிழக்கிலும் நீரெம்மை
கிழித்துத் தொங்கவிடும்
மரணத்தின் சாக்குரல்கள்
அடிவயிற்றில் புரளத் தொடங்க
வேறுவழியெதுவும் இருக்கவில்லை

கீறோ, கிழிதலோ இன்றி
அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய்
விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம்
அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது
குலை குலையாய் எமையழித்து
அதைக் கொண்டாடும் அளவுக்கு
நிகழ்த்திக் காட்டினீர்கள்
எதிரியிடம் கூடக் காணாத வன்மமது

ஆயினும்
இப்பாலிருந்து மன்னிப்பும் இணக்கமுமென
எத்தனை முறை, எத்தனை பேர்
பலமாயிருந்த போதுகூட பல தடவை கேட்டோம்

அப்பாலிருந்தோ
ஓர் வார்த்தை, ஓர் வருத்தம்
ஒப்புக்குக் கூட ஓர் சொல்தானும்
என்றும் எழுந்ததில்லை,
இருக்கட்டும்.

எமக்கிடையே விருட்சமாகி நிற்கும்
இந்த பெருமரத்தின் விதையில்
எவரால் குரோதம் பதியம் செய்யப்பட்டது..?
எங்கள் கனிகள் உங்களுக்கும்
உங்கள் கனிகள் எங்களுக்கும்
எப்படி விடமாகிப் போனது..?

இவ்வளவின் பின்னரும் கூட
பற்றி எரிவதைப் பார்க்கிற போது
ஓடி வந்து தோள் கொடுப்போமென்று
உன்னிய போது தான் தெரிந்தது
எதிரியுடன் சேர்ந்து
எங்கள் கால்களையும்
நீங்கள் முடமாக்கி விட்டீர்கள் என்பது..

-திரு

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..