பெண்களின் பெண் குறிப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களால் ஆபத்தா? Share

பெண்களின் பெண் குறிப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களால் ஆபத்தா?

நம் உடம்பை ஒரு குடும்பமாக கருதினால், அனைத்து உறுப்புகளுக்கும் அம்மா இந்த
சிறுநீரகம்தான். அம்மாவுக்குரிய வேறு பல குணாதிசயங்களும் சிறுநீரகங்களுக்கு உண்டு.
சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்ல; சிறுநீரகங்களின் சீரிய பணிகள் ரத்த அழுத்தத்தை
சமச்சீராக பராமரிப்பது, உடம்பில் தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம்
போன்றவற்றையும் சமச்சீராக வைக்க உதவுவதும்தான்.

ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மூலக்காரணமான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி
செய்வதும், மனிதனின் எலும்பு வட்டை ஆரோக்கியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள்தான் என்பது
ஆச்சரியமான உண்மை. ஏனெனில் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அளவு
ஊக்குவிக்கப்பட்ட வைட்டமின் ‘டி’ சிறுநீரகத்தில் தான் உருவாகிறது.

உடம்பின் கார, அமில அளவுகளை ரத்தத்திலும், உடல் நீரிலும் சரியான விகிதத்தில் வைத்து
பராமரிக்கும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றன. நம் உடம்புக்கு தேவையானதை
சேமித்தும், தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணியையும் மேற்கொள்கின்றன. இன்னும் ஏராளமான
பணிகளை சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன. ஒன்றுக்கு இரண்டாக சிறுநீரகங்கள் இருப்பதால்,
ஒன்று பழுதடைந்தால் கூட அதன் வேலையையும் சேர்த்து இன்னொன்று செய்துகொண்டே இருக்கும்.

சிறுநீரக நோய்கள் ஆண்களை விட பெண்களை தான் அதிகளவு தாக்குகின்றன. பெரும்பாலும்
சிறுநீரக நோய்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், சில நோய்கள் பெண்களை
மட்டுமே தாக்குகின்றன. அதில் முக்கியமானது சிறுநீர் பாதை தொற்று (யூரினரி இன்பெக்‌ஷன்)
நோய் ஆகும். மனமான புதிதில் புதுமணப் பெண்கள் மிகச்சாதாரணமாக இந்த தொற்று நோயால்
பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு முதன்மையான காரணம் என்ன தெரியுமா? பெண்ணின் ரகசிய பகுதி ஒரு மெல்லிய சவ்வு
போன்ற திரையால் மூடப்பட்டு இருக்கும். இந்த கன்னி சவ்வு எனப்படும் மெல்லிய திரை
உடலுறவுவின்போது கிழிக்கப்படும். இதனால், அருகில் உள்ள சிறுநீர் பாதை வழியாக நோய்
கிருமிகள் சிறுநீர் பையினுள் நுழைந்துவிடும். அவை அங்கு வளர்ந்து பெருகி வருவதுதான்
இந்த நோய்க்கு காரணம்.

இதுதவிர கருத்தடைக்காக ஜெல்லி, கிரீம்கள், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவோருக்கும்
ரொம்ப எளிதாக தொற்று ஏற்படும். முன்னதாக இயற்கையாக போர் வீரர்களாக செயல்படும் நன்மை
தரும் பாக்டீரியாக்களை கொன்று அழித்துவிட்டுதான் நோய் கிருமிகள் வளர்கின்றன. மேற்கண்ட
உபகரணங்களை பயன்படுத்தும்போது நன்மை தரும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.

சிறுநீர் பாதை தொற்று வருவதை எப்படி கண்டுபிடிப்பது? என்றால், நீர் எரிச்சல், நீர்
கடுப்பு, நீர் குத்தல், சிறுநீர் நிறம் மாறி பால் போன்றோ அல்லது சுண்ணாம்பு தண்ணீர் போன்றோ
வருதல், சிறுநீரில் ரத்தம் வருதல், சிறுநீரில் அதிகமான துர்நாற்றம் வருதல், குளிர் ஜூரம்,
முதுகுவலி, அடிவயிற்றில் வலி வருதல் போன்றவற்றில் எது ஏற்பட்டாலும், அது சிறுநீர் பாதை
தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்
கல்ச்சர் எனும் சிறப்பு சோதனையும் தேவை.

பள்ளிக்கு செல்லும் இளம்பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் மகளிர்,
நீரழிவு நோய் கண்ட மகளிர், கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் அனைவருக்குமே சிறுநீர் பாதை
தொற்று வரும் வாய்ப்பு ஆண்களை விட அதிகம். இளம்பெண்களுக்கு வரும் சமூக பிரச்சினைகள்
ஒருபுறம் இருக்க, இயற்கையான உடல் உபாதைகள் மறுபக்கம். மாதவிடாய், பிரசவம், அபார்ஷன்
போன்றவை காரணங்களாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது,
மாதவிலக்கின்போது போதிய ஆகாரம் இல்லாமல் இருப்பது, குடும்ப உறவுக்கு பின்னர்
பிறப்புறுப்பை தண்ணீர் விட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவையும் சிறுநீர் தொற்று ஏற்பட
காரணங்கள் ஆகும். பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொதுஇடங்களில் சுகாதாரமான கழிப்பிடங்கள்
இல்லாமல் போனாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஆண்களுக்கு சிறு வயதிலும், வயதான பிறகும் சிறுநீர் பாதை தொற்று நோய் ஏற்படும். ஆனால்,
பெண்களுக்கு அடிக்கடி வரும் ஜலதோஷம் போல இந்நோய் ஏற்படும். பெண்களுக்கு பேறுகாலத்தின்
போது வரும் சிறுநீர் பாதை தொற்றை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் கர்ப்ப
காலங்களில் வரும் நீர்தொற்று பல சமயங்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வரும். இது
அடிக்கடி வந்தால் கருக்கலைதல் (அபார்ஷன்), குறைப்பிரசவம், ரத்த சோகை நோய், சிறுநீரக
செயலிழப்பு போன்றவை கூட வரலாம்.

மாதவிலக்கு நின்று 40-க்கும் மேல் மெனோபாஸ் ஆனவர்களுக்கும் உடலில் ஏற்படும் ஹார்மோன்
மாற்றங்களால் இந்த தொற்று வரும். பெண் உறுப்பு பகுதியில் வழக்கமாக சுரக்கும் பசையான
திரவம் சுரக்காததால் நீர் எரிச்சலம் வரும். இதை சிறுநீர் பாதை தொற்று என தவறாக
நினைத்துக்கொண்டு மருந்து கடைகளில் ஆண்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது.
இதற்காக உள்ள பிரத்தியேக ஹார்மோன் கிரீம்களை பெண்ணின் அந்தரங்க பாகங்களில் பூசுவதன் மூலமே
இதனை சரிசெய்யலாம். பொதுவாக சிறுநீர் பாதை தொற்று நோயை அலட்சியம் செய்தால் அது
விபரீதமாக நிரந்தர சிறுநீர் செயலிழப்பில் கொண்டு போய்விட்டுவிடும்.

இதை முன்கூட்டியே தடுக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தாகம் தீரும் வரை
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சுமார் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இதயம்
பலவீனமானவர்கள் ஒரு லிட்டர் மட்டுமே குடிக்க வேண்டும். சுயமருந்துகள், வலி நிவாரணிகள்,
பெயர் தெரியாத நாட்டு மருந்துகள் என எதையும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக்
கூடாது. குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். சைவ உணவுகள் நல்லது. அளவான
அசைவம் நல்லது. அனைவரும் உணவில் உப்பின் அளவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு நல்லது.

பேராசிரியர் டாக்டர் சவுந்தரராஜன், சிறுநீரக மருத்துவ நிபுணர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..