லண்டன் சென்றுள்ள ஶ்ரீலங்கா ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு

லண்டன் சென்றுள்ள ஶ்ரீலங்கா ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு

லண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்க பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும் வடக்கு ஆளுனர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்று கூறி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் YMCA Indian Student Hostel க்கு எதிரில் நேற்றைய தினம் மதியம் 1:30 தொடக்கம் மாலை 7:00 வரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கையில் குறித்த விடுதிக்கு ஆளுநர் வருகை தந்தபோது “இனப்படுகொலை சிங்கள் அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ !” என ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்ரோசமாக கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மோப்பநாய்கள் சகிதம் கொண்டு கட்டுப்படுத்த காவல்துறையினர் முனைந்தனர்.

அதேவேளை, ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.