பெண் சட்டத்தரணிகளிடம் பாலியல் சில்மிசம் செய்த நீதிபதிக்கு நடந்த கதி!!

பெண் சட்டத்தரணிகளிடம் பாலியல் சில்மிசம் செய்த நீதிபதிக்கு நடந்த கதி!!

பெண் வழக்கறிஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதும், போனில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வகையிலும் பேசி வந்திருக்கிறார். இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தில் தங்களுடைய குமுறல்களைக் கொட்டி கண்ணீர் விட்டிருக்கின்றனர். அதையடுத்து, நீதிபதி கொடுத்த தொல்லைகளைப் பட்டியலிட்டு, சென்னை நீதியரசருக்கும் ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதிக்கும் புகார் பறந்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேல் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக புகார்தாரரும், சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான அஜீத்குமாரிடம் பேசினோம். ``கோவை மற்றும் அஜீத் குமார்திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்தபோதே, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், யாரும் புகார் கொடுக்க முன்வராததால் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கோர்ட்டு நேரம் முடிந்த பின்னர் மாலை 6.30க்கு மேல் தான் மோட்டார் வாகன பெட்டி கேஸ்களைப் பார்ப்பார். அது முடியும் வரை பெண் வழக்கறிஞர்களை இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார். யாரும் இல்லாத நேரத்தில் அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பெண் வழக்கறிஞர்கள் கத்தி கூச்சல் போட்டால், ``தெரியாம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு. வெளிய தெரிஞ்சா அசிங்கமாகிடும். இனிமேல் இந்தத் தவறு நடக்காது’ என காலில் விழுந்திடுவாராம். மேலும், பல பெண் வழக்கறிஞர்களுக்கு இரவு நேரத்தில் போன் மூலமும், மேசேஜ் அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``குடும்ப நல வழக்குக்காக வரும் பெண்களை, வேண்டுமென்றே மாலை வரை காக்கவைத்து ரசிப்பார். அதன்பிறகுதான் பிரச்னைகளைக் கேட்டறிவார். அப்படி வரும் பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதாகச் சொல்லி அவர்களின் போன் நம்பரை வாங்குவார். அதன்பிறகு அவர்களிடம் போனில் தன்னுடைய டார்ச்சரை ஆரம்பிப்பார். ஒரு பெண் பித்தர் போல் பலரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவானிசாகர் பகுதியில் உள்ள பெண் காவலர் ஒருவரிடம் தவறாகப் பேசி, கையைப் பிடித்து இழுக்க விவகாரம் பெரிதாகியிருக்கிறது. லட்சக்கணக்கான நீதிபதிகள் சரியாக செயல்படுகின்றபோது, இப்படி ஒருவர் செய்கின்ற தவறால் நீதித்துறைக்குத் தேவையில்லாத களங்கம் ஏற்படுகிறது” என்றார்.

`பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்’ எனப் பலரும் குரல் எழுப்பி வரும் வேளையில், ஒரு நீதிபதியே பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்டு ஆகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.